கவி. கா. மு. ஷெரீப் இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா?

வாசகர் கடிதம்
கவிமணி கா. மு. ஷெரீப் பற்றி மீண்டுமொரு தடவை எஸ். ஐ. நாகூர் கனி எழுதியிருந்ததைப் படித்தேன்.

நியாயமான குறை ஒன்றை அவர் தெரிவித்திருந்தார். கவிஞர் ஷெரீபை நெஞ்சம் மறப்பதில்லை மறந்ததேனோ என்ற அவரது ஆதங்கத்தை வாசித்த போது, ஆஸ்தான கவிஞர் ஒருவரை அவ்வளவு இலேசாக மறந்து விடலாகாது என்றே எண்ணத் தோன்றியது.

‘வெறுமனே பழைய பாடல்களை மட்டும் ஒளி பரப்பிக் கொண்டிருந்தால் போதுமா? என்றொரு நியாயமான கேள்வியைக் கூட கேட்டிருந்தார்.

ஆம், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் பெரும்பாலும் இளம் தலைமுறையினரே, இவர்களுக்கு பழம்பெரும் பாடகர்கள், கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் தெரியாதிருக்கலாம் என்றாலும் இசைத் தட்டு குறிப்புகளையாவது வாசித்து தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

இலங்கை வானொலி வர்த்தக சேவையில் பீ. எச். அப்துல் ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், மயில் வாகனம் சர்வானந்தா போன்றோர் பாடலாசிரியர் பற்றி குறிப்பிட்டு விட்டு பாடல்களை ஒலிபரப்பு செய்து புகழ்பெற்றனர். டி. வி. நிகழ்ச்சிகளிலும் இதனைச் செய்யலாம் தானே? ‘சக்தி’ ஜனரஞ்சகமான ஒளிபரப்பாகையால், வெறும் பாடல்களை மட்டும் ஒளிபரப்பு செய்வது அழகல்ல.

ஒளிபரப்பு – அறிவிப்பு என்பது வெறுமனே எழுதிக் கொடுத்ததை எடுத்து வாசிப்பதாக இருக்கக் கூடாது. அறிவிப்பு சார்ந்த குறிப்புகள் தான் நிகழ்ச்சிகளை நிமிர்த்தும்.

இது இருக்கட்டும் ஆஸ்தான கவிஞர் வரிசையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டையுடன் கா. மு ஷெரீப் இடம்பெற்றுள்ள போதும், கா. மு. ஷெரீப் மட்டும் ஏன் குறிப்பிடப்படுவதில்லை? ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மட்டுமல்ல.

இன்னும் பல பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்பினாலும் கா. மு. ஷெரீப் பற்றி எந்தக் குறிப்பும் சொல்வதில்லை. மற்றைய இரு கவிஞர்கள் பற்றியும் பாடல்கள் பற்றியும் விமர்சன தொகுப்பு நூல்கள் உள்ளன.

மு. ஷெரீபுக்கு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. இது தான் காரணமோ! தென்னிந்திய ஒளிபரப்பு நிலைய நிகழ்ச்சிகளைத் தழுவியதாகத் தான் இலங்கைத் தமிழ் ஒளிபரப்புகளும் உள்ளன.

ஒரு காலத்தில் ஒலிபரப்பில் நாம்தான் அவர்களுக்கும் வழிகாட்டினோம்! இந்திய ஒளிபரப்புகளில் கூட கா. மு. ஷெரீப் பற்றியோ ஈ. எம். ஹனீபா பற்றியோ ஷேக் முஹம்மத், எஸ். ஹுஸைத்தீன் பற்றியோ குறிப்பிடப்படுவதில்லை.

இந்தியா மெகா டி.வி.யில் ‘அமுதகானம்’ கலைஞர் டி.வி.யில் ‘தேன் கிண்ணம்’ ஜெயா டி.வி, பொதிகை என்பனவற்றில் வெவ்வேறு பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்புகிறார்கள். இவற்றிலே மெகாவிலும் பொதிகையிலும்தான் குறிப்புகளைத் தந்து, விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

என்றாலும் இவர்களும் கா. மு. ஷெரீப் பற்றிக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இலங்கை ஒலிபரப்பாளர்கள் என்னதான் சொல்வார்கள்! சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும்.

மெகா டி.வி.யில் ‘அமுதகானம்’ நிகழ்ச்சி மிகப் பிரமாதம். விதவிதமான குறிப்புகளோடு, விறுவிறுப்பாக நடாத்திச் செல்கிறார் அறிவிப்பாளர் என்றாலும் பாண்டியத்தியம் பெற்ற இந்த அறிவிப்பாளர் கூட இடையிடையே சறுக்குவதும் உண்டு.

இருவர் பாடும் பாடலை, ஒருவர் பாடுவதாகக் குறிப்பிடுவார். ‘ஈஸ்வரி’ பாடிய பாடலை சுசீலா பாடியது என்பார். ஆலமங்களம் ராமலட்சுமி பாடிய பாடலை சுசீலா பாடுவதாக சொல்லார். நம் நாட்டு வானொலியைக் கேளுங்கள். இப்படித்தான் அந்தப் பாடல் ஒலிபரப்பாகும் போது, அந்தந்த கவிஞர்கள் பற்றி அறிந்திருப்பதும் அறிவிப்பாளர்களுக்கு உரிய தகைமையாக இருக்க வேண்டும்.

இலங்கை வானொலியில் பாடலாசிரியர்களை நன்கு அறிந்து ஒலிபரப்பிய ஒரே அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம். இதனால்தான் இவர் சிறந்த அறிப்பாளராக இன்றும் கூட திகழ்ந்து வருகிறார்.

ஹிபிஷி தெளபீக்,
வெலிகாமம்

எம்.எஸ். ராஜேஸ்வரி


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது.

இதன் விளைவாக இன்று வரை ஆயிரக்கணக்கான நிலைக்களன்களில், ஏராளமான ராகங்களில் இசை அமைக்கப்பட, நூற்றுக்கணக்கான நடிகர்கள் அந்த இசைக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

அபூர்வமான குரல் வளம் கொண்டவர்கள் திரைத்துறையில் வரலாயினர். அதில் ஒருவர்தான் குழந்தைக் குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

1955ல் வெளியான ‘டவுன் பஸ்’ திரைப்படத்தில் கவி கா.மு.ஷெரீப் எழுதிய ஒரு பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல் இதோ:-

சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன் வீடு திரும்பல

பட்டு மெத்தை விரிச்சு வச்சேன்; சும்மா கெடக்குது
பசும் பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன்; ஆறிக் கிடக்குது

தலையை வாரி பூ முடிச்சேன்; வாடி வதங்குது
சதா தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வழியை வழியைப் பார்த்துப் பார்த்து
கண்ணும் நோகுது – அவர்
வந்தால் பேச நிறைய சேதி
நெஞ்சில் இருக்குது

படம் எடுத்தவர் எம்.ஏ.வேணு; இயக்கியவர் கே.சோமு; கதை வசனம் ஏ.பி.நாகராஜன்; கதாநாயகன் என்.என்.கண்ணப்பா; கதாநாயகி அஞ்சலி தேவி.

கதாநாயகி பாடுவது போலப் பாட்டு இருந்தாலும் சிறியவர் பெரியவர் அனைவரும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் வண்ணம் பாட்டின் இசை இருக்கவே, இது பெரும் ஹிட் ஆனது. இதே பாட்டு சோகமாக ஒரு முறை பாடப்படும். அதனால் இந்தப் பாடலின் வரிகளும் இசை அமைப்பும் தனிப் பொலிவைப் பெற்றன. இதற்கு முன்னர் பல படங்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தாலும் இதையே தனது முதல் படம் என்று கூறிப் பெருமைப்படுவார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு ஒரு அபூர்வமான குரல்! குழந்தையின் குரல் அவருடையது. இன்று வரை அவரைப் போலக் குரல் வளம் உடைய இன்னொருவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை.

‘களத்தூர் கண்ணம்மா’வில் கமலஹாஸனுக்காக “அம்மாவும் நீயே; அப்பாவும் நீயே” பாடலைப் பாடியவர் இவரே.

குட்டி பத்மினிக்காக ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில், ‘கோழி ஒரு கூட்டிலே” என்ற என்றும் இனிக்கும் பாடலையும் இவர் பாடியுள்ளார். ‘மகாதேவி’ படத்தில் சாவித்திரிக்காக “காக்கா காக்கா மை கொண்டா” மற்றும் “மண்ணுக்கு மரம் பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்)”, “மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே” போன்ற பாடல்கள் இவரது தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.

பராசக்தி படத்தில், “ஓ, ரசிக்கும் சீமானே”, “புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு விட்டுப் போனவரே” ஆகிய பாடல்கள் மூலம் ஜனரஞ்சகமான இதர பாடல்களையும் பாட வல்லவர் இவர் என்பது நிரூபணமானது.

படிக்காத மேதை படத்தில் சௌகார் ஜானகி பாடிய “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு” பாடல் படத்திற்கு களை கூட்டியது.

ஏராளமான சிறப்பான பாடல்களை, குறிப்பாக குழந்தைக் குரலில் பாடிய சிட்டுக் குருவி குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு தமிழ் சினிமா இசை வரலாற்றில் நிச்சயம் தனி இடம் உண்டு!

நன்றி : ச.நாகராஜன்/ நிலாச்சாரல்

கவி. கா. மு. ஷெரீப் இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா?

‘தினகரன்’ பத்திரிக்கையில் வாசகர் கடிதம்

கவி. கா. மு. ஷெரீப் இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா?

ஆடியோ பாடல்கள்

Follow

Get every new post delivered to your Inbox.