“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பாடல் இது. படம் : எங்க வீட்டுப் பிள்ளை. புரட்சித்தலைவர் நடிக்க, மெல்லிசை மன்னர் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.
அவள் : நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் – அவன்
மாம்பழம் வேண்டுமென்றான் – அதை
கொடுத்தாலும் வாங்கவில்லை – இந்தக்
கன்னம் வேண்டுமென்றான்
அவன் : நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன் – அவன்
தாகம் என்று சொன்னான் – நான்
தன்னந்தனியாய் நின்றிருந்தேன் – அவன்
மோகம் என்று சொன்னாள் !
அவள் : ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன
மறந்தா போய் என்றான்
அவன் : கொஞ்சம் பார்த்தால் என்ன எடுத்தால் என்ன
குறைந்தா போய்விடும் என்றான்
அவள் : அவன் தாலிகட்டும் முன்னாலே தொட்டாலே போதும்
என்றே துடிதுடித்தாள்
அவன் : அவள் வேலிகட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது
என்றே கதை படிச்சான்
அவள் : அவன் காதலுக்குப் பின்னாலே கல்யாணம் ஆகும்
என்றே கையடிச்சான்
அவன் : அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே
அத்தானின் காதை கடிச்சா
அவள் : அவன் பூவிருக்கும் தேனெடுக்கப் பின்னாலே வந்து
வண்டாச் சிறகடிச்சான்
அவள் : அவன் ஜோடிக்குயில் பாடுவதைச் சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான் !
அவன் : அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்திலே
அழகாத் தெரிஞ்சுக்கிட்டாள் !
இந்த பாடலில், நாயகனும் நாயகியும் காதலுற்று, மோகம் தலைக்கேறி உரையாடுவது ஒரு நாடக இயலோடு இருப்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் வரம்பு மீறி அவரவர் தங்கள் உள்ளக்கிடக்கைகளை ஒளிவு மறைவின்றி ஒப்புவிக்கையில் கேட்போரை தர்மசங்கடமாக நெளிய வைக்கிறது.
நாயகன் கன்னத்தைப் பார்த்துக் கொண்டே ‘மாம்பழம்’ கேட்டானாம். எங்கே? ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு மாந்தோப்பில். எண்ணத்தை அறிந்துக் கொண்டே அவள் ‘மாம்பழத்தைக் கொடுத்தாளாம். தமிழ்ப் பெண்ணுக்கே உரிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இவையனைத்துயும் இவள் காற்றில் பறக்க விட்டவளாக இருப்பாளோ? அடுத்த வரியைக் கேட்டாள் நீங்களும் ‘ஆம்’ என்பீர்கள்.
தண்ணீர்ப்பந்தலில் நாயகன் நின்று கொண்டு பிறர் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அவளும் ‘தாகம்’ என்று சொல்ல உண்மையிலேயே அவளுக்கு நா வரண்டு தண்ணீர்த்தாகம் எடுத்திருக்கிறதோ என்று நம்பி அருந்துவதற்கு நீர் கொடுக்கின்றான். கூடியிருந்தவர்கள் கலைந்துப் போன பின்பும் இந்தக் காமுகி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. நா கூசாமல் வெட்கத்தை அறவே விட்டு எனக்கு “மோகம்” என்கின்றாள்.
நாணத்துடன் இருக்க வேண்டிய பெண்ணே இதுபோன்று தடம் மாறி பேசுகையில் நாயகன் சும்மா இருப்பானா? நீ என்னிடம் கேட்டால் என்ன? அதைக் கொடுத்தால் என்ன? என்று கேட்க அவளும், ‘தயக்கமென்ன? நீ தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்’ என்று பச்சைக்கொடி காட்டுகிறாள்.
தாலிகட்டும் முன்பே நாம் காதல் லீலைகள் புரிவோம் என்று இருவரும் முடிவு செய்து விட்டனர். ‘தேனிருக்கும் இடத்தினை தேடி மொய்க்கும் வண்டாக’ நாயகனும் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டான்.
விரசத்தின் உச்ச வரிகள் அந்த கடைசி வரிகள்தான். ‘அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்திலே அழகாத் தெரிஞ்சுக்கிட்டாளாம்’. இதற்கு விளக்கம் தேவையில்லை.
கவி காமு ஷெரீப்பை ஏன் இந்த பாடல் திரையுலகத்தைவிட்டே விரட்டியது என்ற உண்மை இப்போதாவது உங்களுக்குப் புரிந்திருக்குமே!!
– அப்துல் கையூம் – 10.03.2009