நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்கார செல்வம்!
ஜி. ராமநாதனின் இசையில் கா.மு.ஷெரீப் எழுதி ‘நான் பெற்ற செல்வம்’. என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது!
திரையில் சிவாஜி கணேசன் தன் குழந்தையிடம் பாடுவதாக அமைந்திருக்கும். டி.எம்.எஸ் தன் கம்பீரமான குரலில் அருமையாகப் பாடியிருப்பார். ஜோன்பூரி ராகத்தில் இழைத்த பாடல்.
தமிழ்த்திரைப்படங்களில் இதுவரை குழந்தைகளை முன்னிலைப்படுத்தி எத்தனயோ பாடல்கள் வந்திருக்கின்றன! ஆனால் கருத்தாழத்தில் இதை மிஞ்சிய பாடல் எதுவுமில்லை என்றுதான் சொல்வேன். அதுவும் இப்பாடலின் இடையே சில அருமையான வரிகள் வரும்.
“ தொட்டால் மணக்கும் ஜவ்வாது!
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு!
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்!”
எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த வரிகளில் குழந்தையின் பெருமையை! தொட்டால் மணக்கும் ஜவ்வாது.. சுவைத்தால் மட்டுமே தேன்பாகின் இனிப்பு தெரியும். ஆனால் அந்தக் குழந்தை தொலைவில் இருந்தால்கூட, அதை நினைக்கும்போதே ஜவ்வாதின் மணத்தையும் தேனின் சுவையையும் மனதால் உணர முடியும்! எத்தனை அழகான கற்பனை!