வாசகர் கடிதம்
கவிமணி கா. மு. ஷெரீப் பற்றி மீண்டுமொரு தடவை எஸ். ஐ. நாகூர் கனி எழுதியிருந்ததைப் படித்தேன்.
நியாயமான குறை ஒன்றை அவர் தெரிவித்திருந்தார். கவிஞர் ஷெரீபை நெஞ்சம் மறப்பதில்லை மறந்ததேனோ என்ற அவரது ஆதங்கத்தை வாசித்த போது, ஆஸ்தான கவிஞர் ஒருவரை அவ்வளவு இலேசாக மறந்து விடலாகாது என்றே எண்ணத் தோன்றியது.
‘வெறுமனே பழைய பாடல்களை மட்டும் ஒளி பரப்பிக் கொண்டிருந்தால் போதுமா? என்றொரு நியாயமான கேள்வியைக் கூட கேட்டிருந்தார்.
ஆம், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் பெரும்பாலும் இளம் தலைமுறையினரே, இவர்களுக்கு பழம்பெரும் பாடகர்கள், கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் தெரியாதிருக்கலாம் என்றாலும் இசைத் தட்டு குறிப்புகளையாவது வாசித்து தெரிந்து கொள்ள முயல வேண்டும்.
இலங்கை வானொலி வர்த்தக சேவையில் பீ. எச். அப்துல் ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், மயில் வாகனம் சர்வானந்தா போன்றோர் பாடலாசிரியர் பற்றி குறிப்பிட்டு விட்டு பாடல்களை ஒலிபரப்பு செய்து புகழ்பெற்றனர். டி. வி. நிகழ்ச்சிகளிலும் இதனைச் செய்யலாம் தானே? ‘சக்தி’ ஜனரஞ்சகமான ஒளிபரப்பாகையால், வெறும் பாடல்களை மட்டும் ஒளிபரப்பு செய்வது அழகல்ல.
ஒளிபரப்பு – அறிவிப்பு என்பது வெறுமனே எழுதிக் கொடுத்ததை எடுத்து வாசிப்பதாக இருக்கக் கூடாது. அறிவிப்பு சார்ந்த குறிப்புகள் தான் நிகழ்ச்சிகளை நிமிர்த்தும்.
இது இருக்கட்டும் ஆஸ்தான கவிஞர் வரிசையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டையுடன் கா. மு ஷெரீப் இடம்பெற்றுள்ள போதும், கா. மு. ஷெரீப் மட்டும் ஏன் குறிப்பிடப்படுவதில்லை? ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மட்டுமல்ல.
இன்னும் பல பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்பினாலும் கா. மு. ஷெரீப் பற்றி எந்தக் குறிப்பும் சொல்வதில்லை. மற்றைய இரு கவிஞர்கள் பற்றியும் பாடல்கள் பற்றியும் விமர்சன தொகுப்பு நூல்கள் உள்ளன.
மு. ஷெரீபுக்கு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. இது தான் காரணமோ! தென்னிந்திய ஒளிபரப்பு நிலைய நிகழ்ச்சிகளைத் தழுவியதாகத் தான் இலங்கைத் தமிழ் ஒளிபரப்புகளும் உள்ளன.
ஒரு காலத்தில் ஒலிபரப்பில் நாம்தான் அவர்களுக்கும் வழிகாட்டினோம்! இந்திய ஒளிபரப்புகளில் கூட கா. மு. ஷெரீப் பற்றியோ ஈ. எம். ஹனீபா பற்றியோ ஷேக் முஹம்மத், எஸ். ஹுஸைத்தீன் பற்றியோ குறிப்பிடப்படுவதில்லை.
இந்தியா மெகா டி.வி.யில் ‘அமுதகானம்’ கலைஞர் டி.வி.யில் ‘தேன் கிண்ணம்’ ஜெயா டி.வி, பொதிகை என்பனவற்றில் வெவ்வேறு பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்புகிறார்கள். இவற்றிலே மெகாவிலும் பொதிகையிலும்தான் குறிப்புகளைத் தந்து, விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
என்றாலும் இவர்களும் கா. மு. ஷெரீப் பற்றிக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இலங்கை ஒலிபரப்பாளர்கள் என்னதான் சொல்வார்கள்! சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும்.
மெகா டி.வி.யில் ‘அமுதகானம்’ நிகழ்ச்சி மிகப் பிரமாதம். விதவிதமான குறிப்புகளோடு, விறுவிறுப்பாக நடாத்திச் செல்கிறார் அறிவிப்பாளர் என்றாலும் பாண்டியத்தியம் பெற்ற இந்த அறிவிப்பாளர் கூட இடையிடையே சறுக்குவதும் உண்டு.
இருவர் பாடும் பாடலை, ஒருவர் பாடுவதாகக் குறிப்பிடுவார். ‘ஈஸ்வரி’ பாடிய பாடலை சுசீலா பாடியது என்பார். ஆலமங்களம் ராமலட்சுமி பாடிய பாடலை சுசீலா பாடுவதாக சொல்லார். நம் நாட்டு வானொலியைக் கேளுங்கள். இப்படித்தான் அந்தப் பாடல் ஒலிபரப்பாகும் போது, அந்தந்த கவிஞர்கள் பற்றி அறிந்திருப்பதும் அறிவிப்பாளர்களுக்கு உரிய தகைமையாக இருக்க வேண்டும்.
இலங்கை வானொலியில் பாடலாசிரியர்களை நன்கு அறிந்து ஒலிபரப்பிய ஒரே அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம். இதனால்தான் இவர் சிறந்த அறிப்பாளராக இன்றும் கூட திகழ்ந்து வருகிறார்.
ஹிபிஷி தெளபீக்,
வெலிகாமம்