RSS

கலைமாமணி விக்கிரமன் பார்வையில் கா.மு.ஷெரீப்

20 Dec

kamuserf02

“தமிழ் முழக்கம்” கவி கா.மு.ஷெரீப்

[கலைமாமணி விக்கிரமன், நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து “அமுதசுரபி” மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார்.

கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதி “தினமணி” தமிழ்மணியில் வெளியான கட்டுரையிலிருந்து நன்றியுடன் வெளியிடப் படுகிறது].

கவி கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல் லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி கா.மு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

‘தமிழரசுக் கழகத்துடன்’ இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

“தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் சேவையை போற்றி பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். “அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி” என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்” என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர். “எனக்கென எஞ்சி நின்றவை — புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று” என்றும், “புதிய தமிழகம் தோன்ற உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது” என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை “குடியரசு” ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது. கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள் என்று சிலம்பொலி செல்லப்பன் குறிப்பிடுகிறார்.

“சீறாப்புராணம்” சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்” என்று கி.ஆ.பெ.புகழ்ந்துள்ளார்.

“தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக” என்று 1946ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939ஆம் ஆண்டில் “சந்திரோதயம்” என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். ‘அன்னையா? கன்னியா?’ என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956இல் ‘சாட்டை’ இதழில் எழுதினார். தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் ‘தமிழ் முரசு’ என அவர் எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால் ம.பொ.சி.யின் தமிழ் அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையைத் “தமிழகக் களக்கவினர்” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார். திரு வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார், செய்வது போல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948இல் அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில் ‘திருநாடே’ என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.

“மாயாவதி” என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். ‘பெண் தெய்வம்’, ‘புது யுகம்’ ஆகிய படங்கலுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியது போல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை ‘மச்சகந்தி’ என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது. 

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.

இளங்கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீப்பின் பெயர் நின்று ஒலிக்கும்.

—————————————————————————————————-

இக்கட்டுரையை எழுதிய கலைமாமணி விக்கிரமன் பற்றிய சிறுகுறிப்பு:

விக்ரமன்

கலைமாணி விக்கிரமன், ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் சிறுகதைகள், புதினங்கள், ஆன்மிக ஆராய்ச்சிகள், “விவாத மேடை’ என்று புதிய பகுதியில் நூல்கள் எழுதி, வெளியிட்டு வந்த “இருகூரான்’ தினமணி கதிர், குங்குமம், முத்தாரம், பேசும்படம், தினசரி உள்ளிட்ட இதழ்கள் பலவற்றிலும் பணியாற்றியவர்.

சென்னையில் இருந்தால்தான் முன்னேற முடியும்; வெகுஜன இதழ்களின் ஆதரவு கிடைக்கும் என்னும் எண்ணம் வளரும் எழுத்தாளர்கள் பலருக்கும் உண்டு. “அது போலில்லை’ என்று சாதனை புரிந்து, புகழ்பெற்ற பல எழுத்தாளர்களைப் பட்டியலிடலாம். அவர்களுள் இருகூரானும் ஒருவர்.

எல்லோராலும் அரசுப் பணியிலோ, வங்கியிலோ பணியாற்றிக் கொண்டு எழுத்தை மற்றொரு உபரி வருமானமாகக் கொண்டிருக்க இயலுமா? இரவு பகலாகத் தொழிலிலும் கவனம் செலுத்தி, எழுத்தையும் தெய்வமாக ஆராதித்த பலருள் மறைந்த இருகூரானையும் சொல்ல வேண்டும். ஆம், அவர் ஒரு தையல் தொழிலாளி.

இயற்பெயர் மூஸா சுல்தான். கோவை மாவட்டத்தில் “இருகூர்’ என்னும் சிற்றூரில் மூஸா ராவுத்தர்-பீவி தம்பதிக்கு 1937-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் காலத்தில் கவிதைகள் எழுதி வந்தார். தமிழாசிரியர் ஸ்ரீரங்கம்பிள்ளை, சுல்தானின் திறமையை அறிந்து அவருடைய கவிதை ஆற்றலை மேலும் ஊக்குவித்தார்.

இருகூரான் என்னும் பெயர் கோவை மாவட்டத்தில் பிரபலமாயிற்று. இருகூரான் என்னும் பெயருக்கு ஏற்பட்ட வரவேற்பால் இவர் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இருகூரில் தொழில் செய்துகொண்டே சென்னையில் உள்ள பிரபல பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார்.

இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப் பின்னணியில், அவர்கள் சமூகத்தைப் பிரதிபலித்து பல சிறுகதைகள் எழுதினார். அவை வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இருகூரில் தந்தையின் தையல் தொழிலுக்கு மிக ஆதரவாக இருந்த – தையல் கலையைக் கற்ற இருகூரானைத் தமிழ் இலக்கிய உலகிற்குள் நுழைவதற்கு இருகூரானின் தந்தை ஆரம்பத்தில் ஆதரிக்காவிட்டாலும் பிறகு ஆதரவளித்தார். சென்னைக்கு வர வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டபோது தந்தை ஏற்கவில்லை. இருகூரான் சொல்லாமலேயே ரயிலேறிச் சென்னைக்கு வந்தார். சென்னை அவரை வரவேற்றது.

இளம் எழுத்தாளர்களைப் பெரிதும் ஊக்குவிக்கும் பத்திரிகையாளரான சாவி, இவர் எழுத்துகளுக்கு ஆதரவு தந்ததுடன் “தினமணி கதிர்’ இதழில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்க வாய்ப்பளித்தார்.

ஆசிரியர் சாவி, தினமணி கதிரிலிருந்து விலகி “குங்குமம்’ பத்திரிகையின் பொறுப்பை ஏற்றபோது, இருகூரானும் அவருடன் சென்றார். குங்குமத்தைச் சிறப்பாக வளர்த்த சாவி அதிலிருந்து விலகி, “சாவி’ என்னும் சொந்த இதழைத் தொடங்கினார். ஆனால், இருகூரானின் சலியாத உழைப்பைக் கண்ட முரசொலிக் குழுமம் அவரைத் தங்கள் இதழ்ப் பணியில், அந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த பல பத்திரிகைகளிலும் உதவி ஆசிரியராகத் தக்கவைத்துக் கொண்டது. ஏறத்தாழ 22 ஆண்டுகள் அந்தக் குழுமத்திலிருந்து வெளியிடப்பட்ட இதழ்களின் எல்லாத் துறைகளிலும் தன்னை முன்னிறுத்தி அனுபவ முத்திரையைப் பதித்துக்கொண்டார் இருகூரான்.

அனுபவம் முதிர, வயதும் கூட முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டது. முரசொலி குழுமத்திலிருந்து ஓய்வு பெற்று, “பேசும்படம்’ இதழிலும் மற்றும் சில இதழ்களிலும் பணியாற்றினார். சுமைதாங்கி, உழைக்கும் மகளிரின் வெற்றிக் கதைகள், ஜெரினா, நம்பிக்கை, நல்லொளி முதலிய நூல்களை எழுதினார். அவருடைய எழுத்துப் பிரதிகள் பல இன்னும் வெளிவராமல் உள்ளன.

கிரசண்ட் கல்லூரி முதல்வர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் பற்றிய வாழ்க்கை வரலாறு, இவருக்குப் புகழும் பணமும் ஈட்டித்தந்தது. நபிகள் நாயகம் (ஸல்), அறிவியல் ஆராய்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு, சின்னஞ்சிறு வயதில் கேளாத கானங்கள் முதலிய நூல்களை எழுதினார். அவற்றில் “உண்மை உழைப்பின் திருப்புமுனைகள்’ என்னும் ஐந்து பாகங்கள் கொண்ட நூலை இவருடைய சாதனையில் சிறந்ததாகக் கருதலாம்.

இவருடைய எழுத்துத் திறமை, ஆராய்ச்சி அறிவு கண்டு “இஸ்லாமிய பண்பாட்டு இலக்கிய நிலையம்’ அளித்த “சதக்கதுல்லாஹ் அப்பா இலக்கியப் பரிசு’ பெற்ற இவரை மலேசிய தமிழ் மாநாட்டின் அமைப்பு பாராட்டிப் பெருமைப்படுத்தியது.

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எளிய நடையில் மேன்மேலும் எழுதினார். நபி முஹம்மது(ஸல்) வாழ்க்கை வரலாற்றை முஸ்லிம் சமுதாயம் தவிர, மற்ற சமுதாய மக்களுக்கும் சென்றடைய வழி வகுத்தார். “அமானி பப்ளிகேஷன்ஸ்’ என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கி, பத்தாண்டுகளில் பல நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். சாதனையாளர் அ.அப்துல் ரஹ்மானின் வரலாற்றைத் தொகுத்து ஓர் உரைநடைக் காவியத்தை அந்தப் பதிப்பகம் வாயிலாக அளித்தார்.

“விவாத இலக்கியம்’ என்ற தலைப்பில் பல பிரச்னைகளை நூல் வடிவில் வெளியிடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். “மாமிச உணவு மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டதா? விலக்கப்பட்டதா?’ என்ற முக்கியப் பிரச்னையை விவாதக் கட்டுரைகளாக அறிஞர்களை எழுதச்சொல்லி, நூல் வடிவில் கொண்டுவரப் பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இவருடைய துணைவியார் பெயர் தாஜின்னிஸா. ஜாகிர் உசேன், ஷாஜஹான், பத்ருதீன் என்று மூன்று புதல்வர்களும், பவுசியா என்ற மகளும் இவருடைய புத்திரச் செல்வங்கள். மூத்த மகன் ஜாகிர் உசேன் தந்தையின் நூல்களை ஒன்றுதிரட்டி வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தன் எழுத்துப்பணி பரவி வருவதில் கவனம் செலுத்திய இருகூரான், தன்னுடலில் புற்றுநோய் பரவுவதை உணரவில்லை. 31.7.2012 அன்று சென்னையில் அவர் மறைந்த செய்தியைப் பல எழுத்தாளர்கள் – வாசகர்கள் இன்னும் அறியவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.

“கலைமாமணி” விக்கிரமனுக்கு அறிமுகம் தேவையில்லை.

  • அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்
  • “இலக்கியப் பீடம்” மாத இதழின் ஆசிரியர்
  • தலைசிறந்த சரித்திர நாவல் ஆசிரியர்
  • 52 ஆண்டுகள் தொடர்ந்து “அமுதசுரபி” மாத இதழின் ஆசிரியராக இருந்தவர்.

தனது இதழியல் அனுபவங்களை, சொல்லப் போனால் சுயசரிதையை, “நினைத்துப் பார்க்கிறேன்” என்கிற தலைப்பில் “இலக்கியப் பீடம்” இதழில் எழுதி வருகிறார் ஆசிரியர் விக்கிரமன். அதன் முதல் பகுதி, அதாவது அவரது முதல் பத்தாண்டு பத்திரிகை அனுபவம் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அடேயப்பா! எத்தனை நிகழ்வுகள், எத்தனை செய்திகள், எத்தனை சுவாரஸ்யமான அனுபவங்கள்…. தமிழ் எழுத்தாளர் “யார்? எவர்?” என்கிற புத்தகம் தேவையில்லை போலிருக்கிறதே..

.கல்கி, சின்ன அண்ணாமலையில் தொடங்கி அவர் வாழ்ந்த காலத்து பத்திரிகை உலகப் பிரபலங்கள் பலருடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் படிக்கும்போது, சில இடங்களில் விழிகளில் நீர் கோர்க்கிறது. பல சந்தர்ப்பங்களில், “என்னே, இவர் செய்த தவம்?” என்று சிலாகிக்கத் தோன்றுகிறது. எழுத்தாளனாக வேண்டும் என்கிற முனைப்புடன் வீறு கொண்டெழுந்த அந்த மிகச் சாதாரணமான குடும்பத்துச் சிறுவன், ஒரு மிகப்பெரிய இலக்கியவாதியாகத் தன்னை நிலைநிறுத்த பட்டகஷ்டங்களும், அனுபவித்த வேதனைகளும் எழுத்தார்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் வழிகாட்டி.

நடத்த முடியாமல் நிறுத்தப்பட இருந்த பத்திரிகையை விலைக்கு வாங்கி, தனது இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி, கட்டிக்காத்து, அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் அதை சீரும் சிறப்புமாக தொய்வின்றி நடத்தி, ஒரு நாள் அதிலிருந்து விடைபெற வேண்டி வந்ததால் ஏற்பட்ட வேதனை, “நினைத்துப் பார்த்தேன்” புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இழையோடுவது உண்மை. எந்தவொரு பத்திரிகை ஆசிரியராலும் தாங்க முடியாத வேதனை அல்லவா அது!

“கலைமாமணி” விக்கிரமனின் நினைவாற்றலைப் போற்றியே தீரவேண்டும். அவர் கற்றதும், பெற்றதும், கண்டதும், கேட்டதும் “நினைத்துப் பார்க்கிறேன்” என்கிற தலைப்பில் தமிழ் இதழியல் ஆய்வாளர்களுக்கு ஒரு கையேடு என்றால், தமிழ் ஆர்வலர்களுக்கு சரித்திரச் செப்பேடு!

 

Tags: , ,

One response to “கலைமாமணி விக்கிரமன் பார்வையில் கா.மு.ஷெரீப்

  1. Malligeshwaran

    09/05/2015 at 9:19 am

    Ivar Vazhunthalum Ezamattom, Thozhunthalum Ezamatom Vanjagar Ivar Illai

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: