RSS

“பாட்டும் நானே பாவமும் நானே ” பாடல் சர்ச்சை

21 Feb

பாடும் நானே

புதுச்சேரியைச் சேர்ந்த ஷேக் முகம்மது அவர்கள் “ராஜ் மதன் “என்ற பெயரில் நடிக்கும் ஒரு திரைப்பட நடிகர் . ரஜனிகாந்துடன் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் . ஒரு இந்தியக்கனவு என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் .கே.பாலச்சந்தரால் “தண்ணீர் தண்ணீர்” என்ற படத்தில் அறிமுகப்படுத்தப் பட்டவர் . இப்போது ‘வம்சம்’ போன்ற ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துக்கொண்டிருகிறார் . ‘யாரடி நீ மோகினி ‘என்ற படத்தில் நயனின் தந்தையாக நடித்திருப்பார் .இப்போது அடையாளம் தெரிந்திருக்குமே ! (இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் நெல்லை பாளையங்கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில்தான் எடுக்கப்பட்டது)
சரி ! இப்போது விஷயத்திற்கு வருகிறேன் . நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் பலவிஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருப்போம். இந்த முறை அவர் வந்திருந்தபோது கவிஞர் .கா.மு .ஷெரிப் அவர்களைப் பற்றி பேச்சு வந்தது . ‘திருவிளையாடல்’ என்ற படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் கவிஞர். கண்ணதாசன் எழுதியது என்று விளம்பரப்படுத்தியிருப்பார்கள். ஆனால் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை மட்டும் எழுதியது கவிஞர். கா.மு. ஷெரிப் என்றேன் . அப்போது ஷேக் அவர்கள் இது உண்மையான தகவல்தான் . இது எப்படி நடந்தது எப்படி என்பதை நான் சொல்கிறேன் என்று சொல்லி அந்த விபரத்தை விரிவாகச்சொன்னார் .

அவர் சொன்ன அந்த அரிய தகவல் நண்பர்களை  சென்றடையவேண்டும் என்ற ஆவலுடன் அவர்சொன்ன விபரங்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

1956 ம் ஆண்டு ‘சம்பூர்ணராமாயணம்’ என்ற படம் எம்.ஏவி. பிக்சர்ஸ் எம்.ஏ .வேணு என்பவரால் தயாரிக்கப்பட்டது . இயக்குனர் ஏ .பி நாகராஜன். ராமயணத்தில் ராவணன் ஒரு இசை மேதை . சபையோருக்கு ராவணனின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக அரசவையில் ராவணன் பாடும் பாடல் ஒன்று தேவைப்பட்டதாம் . அரசவையில் ராவணன் பாடும் அந்த ஒரு காட்சியிலேயே ராவணின் இசைப் புலமையை வெளிப்படுத்தும் விதமாக பாடல் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக இரு கவிஞர்களிடம் பாடல் எழுதும் பொறுப்பு தரப்பட்டதாம்.

அந்தக் கட்சிக்கு கவிஞர் மருதகாசி ‘சங்கீத சௌபாக்கியமே ! என்றும் குன்றாத பெரும்பாக்கியமே ! “ என்ற பாடலை எழுதினார் . அந்தப் பாடலில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடும் ராகங்களை சி.எஸ் ஜெயராமன்பாடுவார் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் அது .

ராவணன் பாடும் அந்த பாடல் காட்சிக்காக கவிஞர் .கா.மு .ஷெரிப்அவர்கள் ‘பாட்டும் நானே ! பாவமும் நானே ! என்ற பாடலை எழுதி டி .எம். சௌந்தரராஜன் பாட அந்த இரண்டு பாடல்களுமே கே.வி .மகாதேவனால் இசை அமைக்கப்பட்டு ஒலிப்பதிவுசெய்யப் பட்டதாம் . ஆனால் திரைப்படத்தில் மருதகாசி அவர்கள் எழுதிய “சங்கீத சௌபாக்கியமே!” என்ற பாடல்தான் இடம்பெற்று சக்கை போடு போட்டது .

பத்தாண்டுகள் கழித்து ‘திருவிளையாடல்’ படம் தயாரிக்கப்பட்டபோது ஹேமநாத பாகவதர் வேடத்தில் வரும் சிவனின் இசைப் புலமையை வெளிப்படுத்தும் காட்சிக்காக பாடல் ஒன்று தேவைப்பட்டதாம் . அப்போது ஏ.பி. நாகராஜனின் நண்பர் ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்பு சம்பூர்ண ராமாயணம் படத்திற்காக கா .மு. ஷெரிப் எழுதி பதிவுசெய்யப்பட்ட பாடலை திருவிளையாடல் படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாமே என்ற யோசனையை இயக்குனர் ஏ .பி .நாகராஜனிடம் கூற உடனே அவர் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டாராம் .

உடனே கா.மு ஷெரிப் அவர்களை தொடர்புகொண்டு அவரது சம்மதத்தைக் கேட்டார்களாம் . எந்த மறுப்பும் சொல்லாமல் பெருந்தன்மையுடன் சம்மதம் கொடுத்தாராம் கவிஞர் . மிகவும் மகிழ்ந்த ஏ.பி. நாகராஜன் அந்த பாடலுக்கு என்ன சன்மானம் வேண்டுமென்று கேட்டனுப்பினாராம். அதற்கு கா.மு.ஷெரீப் அவர்கள் அந்தப் பாடலுக்கு நான் ஏற்கனவே பணம் வாங்கிவிட்டேன் . இப்போது அதே பாடலுக்கு மீண்டும் பணம் வாங்கமாட்டேன் என்று மறுத்து விட்டாராம் . எவ்வளவு உயந்த பண்பாளர் கா.மு ஷெரிப் அவர்கள் !

மீண்டும் அதே ‘பாட்டும் நானே’ என்ற பாடல் டி.எம் சௌந்தரராஜனால் பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்டு ‘திருவிளையாடல் ‘படத்தில் இடம்பெற்றது .

கவி .கா .மு ஷெரீப் அவர்களைப் பற்றிய சில தகவல்கள் . 1948 ம் ஆண்டு ‘மாயாவதி’ என்ற படத்தில் முதன்முதலாக பாடல் எழுதிய கா.மு .ஷெரிப் அவர்கள் சுமார் நூறு படங்களுக்குமேல் பாடல்கள் எழுதியிருக்கிறார் . காலத்தால் அழியாத பாடல்கள் அவை .

அவற்றில் சில : ‘டவுன் பஸ்’ என்ற படத்தில் வரும் “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா ! மற்றும் பொன்னான வாழ்வு மண்ணாகிப்போனால்” , முதலாளி படத்தில் வரும் ‘ஏரிக்கரை கரையின் மேலே ‘ அன்னையின் ஆணை படத்தில் வரும் ‘ அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை ‘ , சிவகாமி படத்தில் வரும் ‘வானில்முழுமதியைக்கண்டேன் ‘ மந்திரிகுமாரி படத்தில் வரும் ‘உலவும் தென்றல் காற்றினிலே ‘ நான் பெற்ற செல்வம் படத்தில் வரும் ‘ வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் ‘ மக்களை பெற்ற மகராசி படத்தில் வரும் ‘ ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ? ‘ போன்ற ஏராளமான பாடல்கள் கவிஞரின் சாகாவரம் பெற்ற பாடல்கள் .

(கவிஞர் .கா.மு .ஷெரீப் அவர்கள் கலைஞர் .கருணாநிதிக்கு உயிர் நண்பர் என்பது கூடுதல் தகவல்.)

 தகவல் : முஹம்மது முஸ்தபா

Advertisement
 

One response to ““பாட்டும் நானே பாவமும் நானே ” பாடல் சர்ச்சை

  1. googleprakash

    25/05/2015 at 4:56 pm

    Reblogged this on ROUGH NOTE.

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: