RSS

பண்பட்ட பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர்

22 Feb

நூற்றாண்டு விழா

[கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா மலருக்கு நானெழுதிய கட்டுரை இது- அப்துல் கையூம்]

வாழ்க்கையில் மட்டுமல்ல, வார்த்தைகளிலும் கண்ணியத்தைக் கடைப்பிடித்தவர் கவி கா.மு.ஷெரீப். அவரது நேரான நெறிகளைப் போன்றே,  அவரது சீரான வரிகளும் இருந்தன.

அவரது பேனா மை சிந்திய சொற்கள், ஏனோ தானோவென்று எடக்கு முடக்காக இல்லாமல், தேனாக பாய்ச்சும் தெளிவான சொற்களாகவே வந்து விழுந்தன. கொச்சை வார்த்தைகளோ, இச்சை வார்த்தைகளோ, பச்சை வார்த்தைகளோயின்றி பண்பட்டவையாகவே அவை  இருந்தன.

பாடலொன்று மனதில் நீங்கா இடம் பெறுவதற்கான தகுதி, அது சந்தம் நிறைந்ததாக இருக்க வேண்டுமென்பதோ, வார்த்தை ஜாலங்கள் மிகுந்ததாக இருக்க வேண்டுமென்பதோ, சங்கத் தமிழ் வார்த்தைகள் கலந்திருக்க வேண்டுமென்பதோ கட்டாயமல்ல.

எளிமையான வார்த்தைகளைத் தேடிப்பிடித்து பாமரனும் புரிந்துக்கொள்ளும் வண்ணம் பாடல்களை இயற்றுவதில் வல்லமை படைத்திருந்தார் கவி கா.மு.ஷெரீப்.

திரைப்படத்தில் பாடலெழுத வாய்ப்பு தேடிவந்தபோது “அம்மி கொத்த சிற்பியை அழைக்காதீர்” என்று மறுத்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். திரைப்படப் பாடலில் இரட்டை அர்த்த வரிகளும், ஆபாச வார்த்தைகளும் மலிந்து போனபோது, மனம்வருந்தி “இனி சினிமாவுக்கு பாடல் எழுதவே போவதில்லை” என்று திரையுலகைத் தலைமுழுகியவர் கவி.கா.மு.ஷெரீப்.

இவரெதிய எண்ணற்ற பாடல்களை ஆராய்ந்துப் பார்த்தால் எனது கருத்து எவ்வளவு உண்மை என்பது புரியும். எந்தப் பாடலிலும் சரசத்தை சொட்டும் விரசத்தை மருந்துக்கும் காண முடியாது

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். கா.மு.ஷெரீப் எழுதிய ஒரே ஒரு பாடலை மட்டும் இப்போது நம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

அன்னையைப் பற்றி எத்தனையோ பாடலாசிரியர்கள் எழுதி வைத்துப் போயிருக்கிறார்கள். ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ஆழமாக நம் மனதில் அடிச்சுவட்டை பதிந்திருப்பது “அன்னையின் ஆணை” திரைப்படத்தில் கா.மு.ஷெரீப் எழுதிய “அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை” என்ற பாடல் மட்டுமே.

அந்தப் பாடலில் அப்படி என்னவொரு சிறப்பு என்பதை சொன்னால் புரியாது. அப்பாடலை அனுபவித்துக் கேட்டால் மட்டுமே நம்மால் பரிபூரணமாக உணரமுடியும்.

தாயின் மாண்பினை எடுத்தியம்பும் ஏராளமான பாடல்கள் திரைப்படங்களில்  இடம் பெற்றிருக்கின்றன.

 ‘தளபதி’ படத்தில் “சின்னத்தாயவள் தந்த ராசாவே ” ,

‘அடிமைப்பெண்’ படத்தில் “தாயில்லாமல் நானில்லை”,

அதே படத்தில் ஜெயலலிதா பாடிய

‘அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு”

‘உழைப்பாளி’  படத்தில் “அம்மா அம்மா எந்தன் ஆருயிரே”

‘தூங்காதே தம்பி தூங்காதே’  படத்தில் “நானாக நானில்லை தாயே ”

‘வியாபாரி’ படத்தில் “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?”

‘மன்னன்’ படத்தில் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே!  அம்மாவை வணங்காது உயர்வில்லையே!”

‘வா ராஜா வா’ என்ற படத்தில் “தாயிற் சிறந்த கோவிலுமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”

இப்படியாக, திரைப்படத்தில் அன்னையைப் புகழ்ந்து எழுதப்பட்ட எத்தனையோ பாடல்களை நம்மால் அடையாளம் காட்ட முடியும்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘நியூ’ படத்தில் அண்மையில் வெளிவந்த

“காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொழும் தேவதை அம்மா

அன்பென்றாலே அம்மா – என்

தாய் போல் ஆகிடுமா?”

என்ற பாடல் தாய்ப்பாசத்தை பறைசாற்றும் அருமையான பாடலென்பதை நம்மால் மறுக்க முடியாது.

கவி.காமு.ஷெரீப்பின் “அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை” என்ற பாடலை செவியுறுகையில் நமக்குள் ஏதோ ஒரு இரசாயன மாற்றம் நிகழ்கிறது. நம்மை அறியாமலே நாம் மெய்மறந்து போகிறோம்.  இதற்கு நிகரான ஒரு பாடல் இதுவரை வரவேயில்லை என உறுதி கூறலாம்.

“தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்று அண்ணல் நபிகள் மொழிந்தார்கள். தாயின் மேன்மையை அத்தனை மதங்களும் அத்தனை இதிகாசங்களும் புகழ்பாடுகின்றன.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்டதாய்”

என்றார் திருவள்ளுவர்.

“முந்தி தவமிருந்து, முன்னூறு நாள் சுமந்து, அந்தி பகலாக தொந்தி சரியக் கிடந்த” விந்தைமிகு அன்னையின் மேன்மையை கவியாகப் புனைந்தார் பட்டினத்தார்.

இதே கருத்தினை கவி.காமு,ஷெரீப் அவர்களின் காலத்தால் அழியாத  இப்பாடலின் தொகையறாவில் நாம் காண முடிகிறது.

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்

பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழ செய்தாள்

என்ற தொகையறாவைக் கேட்டதுமே  நம் உள்ளதில் தாய்ப்பாசம் பொங்கி நம்மை ஒருகணம் கண்கசிய வைத்து விடுகிறது.  நம் தாய் நமக்காக பட்ட இன்னல்கள் நம் கண்முன்னே வந்து நிழலாடுகின்றன. அவளை நினைத்து உருகிப் போகிறோம்.

 அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லைஅவள்

அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை

என்ற முதல் வரிகள் நம் மனதில் ஏது ஒரு மின்னலைப் பாய்ச்சுகின்றன. உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஒரு நிமிடம் நாம் மெளனித்துப் போகிறோம்.

தாயை மதிக்காத ஒருவனை மனித ஜாதியாகவே நாம் கருத முடியாது என்று சொல்லாமல் சொல்கிறார் கவிஞர்.

துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டேநம்மை

சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

என்ற வரிகள் தாயானவள் தன் குழந்தையை பெற்றெடுத்து, பேணி வளர்த்து ஆளாக்க எத்தனை விதமான துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நமக்கு விளக்குகிறது.

 நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்ஒரு

நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்

மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே

மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்

பாடல்கள் ஒரு சில வரிகளேயானாலும் அது ஒருவரின் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை வருணிக்க இயலாது. ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் உணர்ச்சிகள் பொதிந்திருப்பதை உணர முடிகிறது.

“அன்னையின் ஆணை” என்ற படத்தில் கவி.கா.முஷெரீப் அவர்கள் எழுத, எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைப்பில்  டி.எம். சௌந்தரராஜன் பாடிய இப்பாடல் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அழியாத பாடலாக அன்றலர்ந்த மலராக மணம் வீசும்.

கவிஞர் அப்துல் கையூம்,

தலைவர், பாரதி தமிழ்ச் சங்கம்

பஹ்ரைன்

Advertisement
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: