நேற்றைய முந்தைய தினம் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் 116-வது பிறந்தநாள். ம.பொசி.அவர்களின் செல்வமகள் மாதவி பாஸ்கரன் அவர்கள் நினைவு படுத்திய பிறகுதான் எனக்கு இது தெரிய வந்தது
இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத செய்தி மா.பொ.சிக்கும், கவி கா.மு ஷெரீப்புக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு. அரசியல் ரீதியாகவும் சரி, இலக்கிய ரீதியாகவும் சரி இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று களமாடிய துணிச்சல்காரர்கள். பலகாலம் சிறைவாழ்க்கையை எதிர்க்கொண்டவர்கள்
இலட்சத்துக்கு எழுதாமல் இலட்சியத்துக்காக எழுதிய மனிதரிவர் என்று கவி.கா.மு.ஷெரீப் பெயர் வாங்கிய நேரமது. சிலம்புச் செல்வரைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. சிலப்பதிகாரத்தின் பெருமையை பட்டி தொட்டிகளெங்கும் கொண்டுச் சென்றவர்.
கவி.கா.மு.ஷெரீப், ம.பொ.சி.யின் நிழல் போல செயல்பட்டார். “தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற இதழ்களை நடத்தினார். ஏற்கனவே இளமைக்காலத்தில் திருவாரூரில் “ஒளி” எனும் பத்திரிக்கையை நடத்திய அனுபவம் இவருக்கு உண்டு.
ம.பொ.சியும், கவி.கா.மு.ஷெரீப்பும் இணைந்து செய்த சாதனைகள் அபாரமானவை. இந்த இருவரும் தமிழுணர்வுள்ள இளைஞர்களை பேச்சால் கவர்ந்திழுத்து புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள்.
இவர்கள் முதன்முதலில் “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என்றும், “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்றும், “தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர்கள் .
வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதிகள்.
திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென்குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கு எல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து இவர்கள் போராடினார்கள். இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கு எல்லையாக இருக்கிறது.
கலாச்சார கழகமாக ஆரம்பித்திருந்த “தமிழரசுக் கழகத்தை” எல்லைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியதில் இவர்களுக்கு பெரும் பங்குண்டு
ம.பொ.சிக்குத் துணையாக அன்று காங்கிரசிலிருந்த தமிழார்வலர்கள் பலரும் வெளியேறி அவருடன் தமிழரசுக் கழகத்தில் இணைந்தனர். சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி குப்புசாமி மற்றும் வழக்கறிஞர் விநாயகம் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
“அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி” என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்”என்று கவி.கா.மு.ஷெரீப்பை மனம் திறந்து கவிஞர் கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.
1955 – ஆம் ஆண்டு “தமிழ் முழக்கம் பதிப்பகம்” பதிப்பித்த கவி.கா.மு.ஷெரீப் எழுதிய நூல்களில் “தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?” என்ற நூல் மிகவும் முக்கியமானது.
சாட்டை – 1956 இல் ம.பொ.சி. பொன்விழா மலராக வெளிவந்துள்ளது. சென்னையிலுள்ள கா.மு.ஷெரீப் அவர்களது “தமிழ் முழக்கம் அச்சகம்” இதனை வெளியிட்டது, இதன் ஆசிரியராக தொடக்கத்தில் ஏ.பி.நாகராஜன் இருந்தார். இந்த அரிய புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
1.10.55 -ஆம் ஆண்டு கவி.கா.மு.ஷெரீப் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “தமிழ் முழக்கம்” (மாதமிருமுறை) பத்திரிக்கையின் அரிய பிரதியை இங்கே படத்தில் காணலாம். .