தமிழ்த் திரையுலகில் இருந்த அருமையான கவிஞர்களில் ஒருவர் திரு.கா.மு.ஷெரீப் அவர்கள். மிகவும் அருமையான பாடல்களை எமக்குத் தந்துள்ளார்.
“பணம் பந்தியிலே” என்னும் படத்திலே வரும் “பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே” என்னும் பாடல் இவரின் அற்புத ஆற்றலுக்கு ஒரு உதாரணமாகும்.
ஆரம்ப காலங்களில் இவருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இயக்குனர் ஏ.பி.நாகராஜனும், கா.மு.ஷெரீபும் தமிழரசுக் கட்சியின் தீவிர அங்கத்தினர்கள். ஆனால் கவியரசரோ அக்காலகட்டத்தில் தி.மு.க விலே தம்மை முற்றாக ஜக்கியப்படுத்தியிருந்தார்.
இதுவே இவர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
ஒருமுறை காரிலே கா.மு.ஷெரீபும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் பயணமாகிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே கவியரசரைப் பற்றிப் பேச்செழுந்ததாம்.
“கண்ணதாசன்” என்று சொல்லுவதை விட “கள்ளதாசன்” என்று சொல்லலாம் என்றாரம் கவிஞர் கா.மு.ஷெரீப் திடுக்கிட்டுப்போன கே.வி.மகாதேவன் ” எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டாராம்.
” பின்னே என்ன சங்ககாலப் பாடல்களிலிருந்து திருடியல்லவா பாட்டெழுதுகிறார்” என்றாராம் கா.மு.ஷெரீப், அதற்கு கே.வி.மகாதேவனோ “அப்படியே திருடினால் கூட அதை எவ்வளவு எளிமையாக திரைகானங்களில் புகுத்துகிறார், இவரைப் போல யாரால் முடியும்?” என்றாராம்.
சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு கா.மு.ஷெரீபும் ” ஆமாம் கண்ணதாசனைப் போல இத்தனை அழகாக சங்ககால இலக்கியங்களைத் திரைகானங்களில் புகுத்த யாருமேயில்லை” என்று மனதார ஒத்துக் கொண்டாராம்.
பிந்திய காலங்களில் இவர்களுக்கிடையே சுமுகமான உறவு நிலவியது. இதோ ஒரு சித்தர் பாடலை இருவரும் எத்தகைய வகையில் கையாண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
“பணம் பந்தியிலே” படத்தில் கா.மூ.ஷெரீப் எழுதிய பாடல்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம்
விருப்புடன் தேடிடுவார் ஞானத்தங்கமே ! – அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே !
உண்மையைப் பேசிடுவார் ஒரு பிழையும் செய்தறியார்
ஊரெல்லாம் தூற்றிடுமே ஞானத்தங்கமே ! – அவரை
ஒதுக்கியே வைத்திடுமே ஞானத்தங்கமே !
நாக்கினிலே இனிப்பிருக்கும் நெஞ்சினிலே நஞ்சிருக்கும்
நல்லவரைப் போல் நடித்திடுவார் ஞானத்தங்கமே ! – அவரை
நாடும் நம்பிடுமே ஞானத்தங்கமே !
ஓதாத நூல்களில்லை உரைக்காத ஞானமில்லை
எது உண்மை என்றறியார் ஞானத்தங்கமே ! – உலகில்
இவர்களும் வாழுகின்றார் ஞானத்தங்கமே !
பந்தமேது பாசமேது பக்தியேது முக்தியேது
அந்தமெது ஆதியெது ஞானத்தங்கமே ! – இதை
அறிந்தவர் யாருமில்லை ஞானத்தங்கமே ! – என்னை
அறிந்தவர் யாருமில்லை ஞானத்தங்கமே !
இதே மூலத்தைக் கொண்ட சித்தர் பாடலிலிருந்து கவியரசர் கண்ணதாசன் “திருவருட்செல்வர்” படத்துக்காக எழுதிய பாடலைப் பார்ப்போம்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே ! – அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே !
உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத்தானுரைப்பான்
ஊருக்கே பகையாவான் ஞானத்தங்கமே ! – அவன்
ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே !
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே ! – அவன்
நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ! ஞானத்தங்கமே !
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத்தங்கமே ! – அவன்
கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ! ஞானத்தங்கமே !
இந்த ஒரு அற்புதமான கவிஞர்களின் ஆற்றலை ஒரே மூலத்திலிருந்து அவர்கள் வடித்த அருமையான திரைகானங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
சக்தி
[அன்புடன் குழுமத்தில் நண்பர் சக்தி சக்திதாசன் எழுதியது] – 18.10.2008