RSS

Category Archives: ஜெயகாந்தன் பார்வையில்

“பாட்டும் நானே” யாரெழுதியது?

திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்று பரவலாக நம்பப்படும் வேளையில் நான் இவ்வலையில் அது கவி.கா.மு.ஷெரீப் அவர்களால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டதற்கு ஏதேனும் வலுவான ஆதாரங்கள் உங்களிடத்தில் இருக்கின்றதா? என்று வாசகர்கள் வினவுகிறார்கள். திரு.ஜெயகாந்தன் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரிடம் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம். திரு.ஜெயகாந்த்தன் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலின் நகலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். – அப்துல் கையூம்

ஆதாரம்:

நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,

ஆசிரியர் : ஜெயகாந்தன்

வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 17

 

 

உள்ளத்தில் நல்ல உள்ளம்

ஜெயகாந்தன்

தமிழகம் கண்ட மகா கவிஞர்களில் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் பெயர் காலத்தால் அழியாதது. அவரது புகழைப் பாடும் வகையில் கவி.கா.மு.ஷெரீப் என்ற ஒரு வலைப்பூவைத் தொடங்கி அவரைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து, வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவு செய்தி வருகிறேன்.

தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் கவிஞரின் நற்பண்புகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்கின்றார். அதிலிருந்து சில பத்திகள் :

“ஷெரீப் அவர்கள் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். சினிமா உலகத்தில் தொடர்பு இருந்தும், அந்த சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர் பண்பு கவிஞர் கா,மு,ஷெரீப்பிடமே இருந்தது.

ஒரு கவிஞன் வறுமையிலும், செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமே நான் பயின்று கொண்டேன்.

கவிஞர் கா.மு.ஷெரீப் முஸ்லீமாக இருந்த போதிலும் ஒரு தீவிரமான சைவர். அது குறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.

கள் வியாபாரம் செய்பவன் கள் அருந்தமாட்டான். அது போல கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா? கவிஞர் கா.மு.ஷெரீப் கறி வியாபாரம் செய்யத் தயாராக இருந்தாலும் இருப்பாரே ஒழியப் புலால் சாப்பிட ஒப்பமாட்டார்.

அவரைப் பார்த்து நானும் கொஞ்சநாள் சைவமாக இருந்தேன். ஷெரீப் புகை பிடிப்பதில்லை. மேலும் புகைப்பிடிப்பவர்களையும், அவருக்குப் பிடிக்காது என்றிருந்தேன்.

நான் அவர் எதிரில் ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகைப் பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன். அதனை நான் அவர் விஷயத்தில் இன்றுவரை கைக்கொண்டிருக்கிறேன்.

ஷெரீப் அவர்கள் பெரிய குடும்பஸ்தர். நிறைய குழந்தைகள். ஓர் அச்சகம் வைத்திருந்தார். அவரை நம்பி ஐந்தாறு தொழிலாளர்கள் இருந்தனர். ‘தமிழ் முழக்கம்’ என்னும் வாரப் பத்திரிக்கையும், ‘சாட்டை’ பத்திரிக்கையும் அங்குதான் கம்போஸ் ஆயின.

நாள் முழுதும் நான் கவி கா.மு.ஷெரீப்புடன் பொழுது கழித்த நாட்களில் மதியம் சிற்றுண்டியாக வேகவைத்த புளியங்கொட்டைச் சுண்டல் சாப்பிடுவோம். அது மிகவும் புரோட்டீன் சத்து உடையது என்பார் ஷெரீப். அந்தக் காலத்தில் சாப்பிட்டது தவிர, அதன் பின்னர் அவ்வளவு ருசியான அந்தச் சிற்றுண்டியைச் சாப்பிடும் சந்தர்ப்பம் இன்னும் எனக்கு வரவில்லை.

கதையோ, கட்டுரையோ எழுதித் தந்தால் ‘ரூபாய் பத்து மட்டும்’ என்று தமிழில் எழுதிய செக் ஒன்று தருவார் ஷெரீப் அவர்கள். பத்திரிக்கைக்கு எழுதிச் சன்மானம் வாங்கியது ஒரு காலத்தில் கவி கா.மு.ஷெரீப் அவர்கள் ஒருவரிடமிருந்துதான் என்பதை நன்றியோடு எப்போதும் நினைவு கூர்கிறேன்.

“பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் “கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது” என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.

“பாட்டும் நானே, பாவமும் நானே” என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.

கவி. கா.மு.ஷெரீப் அவர்களின் படைப்பை விடவும், அவரது பாடல்களை விடவும், அவரையும், அவரது குணாதிசயங்களையும் நான் அதிகம் மதிக்கின்றேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக, சான்றுக்காக ஒன்றைக் குறிப்பிட்டது சர்ச்சையாகலாம் என்று தெரிந்தே அதை நான் எழுதினேன்.

– ஜெயகாந்தன்

[பத்திரிக்கையாளர் ஜே.எம்சாலி எழுதிய கலைமாமணி கவி. கா.மு.ஷெரீப் என்ற கட்டுரையிலிருந்து.]