RSS

Category Archives: திரைப்படப் பாடல்கள்

அன்னையைப் போலொரு தெய்வமில்லை

                    (தொகையறா)

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்விபெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழச் செய்தாள்

                        *               *

அன்னையைப் போலொரு தெய்வமில்லை – அவள்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை – மண்ணில் மனிதரில்லை

துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் – ஒரு
நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்

பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்

பாடலாசிரியர் : கவி. கா.மு.ஷெரீப்

 

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா? – என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே

பட்டு மெத்தை விரிச்சு வச்சேன் சும்மா கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கெடக்குது
தலையை வாரி பூ முடிச்சேன் வாடி வதங்குது – சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கெடக்குது

வழியை வழியை பாத்து பாத்து கண்ணும் நோவுது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது (சிட்டுக்குருவி)

பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப்
படம் : டவுன் பஸ்

 

பொன்னான வாழ்வு மண்ணாகி போனா

பெண்: பொன்னான வாழ்வு மண்ணாகி போனா
                 துயரம் நிலைதானா? உலகம் இதுதானா?

                 பண்போடு முன்னாளில் – அன்பாக
                 என்னோடு வாழ்ந்தாரே
                 வீணான பாலாய் விரும்பாத பூவாய்
                 இன்றென்னை விடுத்தாரே
                 என் அன்பை மறந்தாரே (பொன்னான வாழ்வு)

ஆண்:  பண்பாடு இல்லாமல் – மண்மீதே
                 பாழாகி நொந்தேனே
                 தேனான வாழ்வு திசை மாறிப் போச்சே
                 நிம்மதி இழந்தாச்சே
                 தீராத பழியாச்சே

பெண்:   பெண்ணென்று பாராமல் – எல்லோரும்
                   என்மீது பழி சொல்வார்
                   உள்ளன்பு கொண்டேன் அவர் மீது நானே
                   ஊராரும் அறிவாரோ?
                   என் வாழ்வை அழிப்பாரோ?

பாடியவர்கள் : ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன், ராதா ஜெயலட்சுமி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப்

 

ஏரிக்கரையின் மேலே..

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
படம் : முதலாளி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப்

 

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
                   உண்மைக் காதல் மாறிப் போகுமா?

பெண் :  முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
                    இன்னாளிலே காதல் மண்ணாவதோ?

ஆண் :    சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே
                     என்னாசை தங்கமே நேசம் மாறுமா?

பெண் :    பகையாலே காதலே அழியாது கண்ணா
ஆண் :     பண்போடு நாமே இன்பம் காணுவோம்
                      நாளுமே.. !  பாரிலே..! (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)
பெண்  :    என்னாவியே கண்ணே உன் போலவே
                     மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா?

ஆண் :    இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
                    என்னாசை கண்ணா நீயென் தெய்வமே

ஆண் :    அறியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
பெண் :    பண்போடு நாமே இன்பம் காணுவோம்
                     நாளுமே..!  பாரிலே..! (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)

பாடியவர்கள் : சரோஜினி,  ஸ்ரீனிவாஸாச்சாரி

 

நான் பெற்ற செல்வம்

தி.மு.கழகத்தின் சார்புள்ள நடிகராக கருதப்பட்ட சிவாஜி கணேசன், அந்த பிம்பத்தை மாற்ற 1955-ல் குடும்பத்தோடு திருப்பதி சென்று வந்தார். இதன் காரணமாக தி.மு.க.விற்கு எதிரணியில் இருந்த தமிழரசுக் கட்சியின் சார்புகொண்ட ஏ.பி.நாகராஜன் போன்றவர்கள் சிவாஜி பக்கம் வந்தார்கள்.

ஏ.பி.என்.னின் கதை வசனத்தில் முதன்முறையாக “நான் பெற்ற செல்வம்” என்ற படத்தில் சிவாஜி நடித்தார்.

பணத்தாசை பிடித்த தந்தையை எதிர்த்து, வீட்டைவிட்டு வெளியேறி தன் மாமன் மகளான கெளரியை மணக்கிறான் சேகர்.

பல இன்னல்களுக்குப் பிறகு, ஒரு பிள்ளையை ஈன்றுவிட்டு இறந்து போகிறாள் கெளரி.

கசப்பான அனுபவங்கள் “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்” என்று சேகரைப் பாட வைக்கின்றன. (பாடலாக்கம் கவி கா.மு.ஷெரீப்)

தன் மகனைச் சீராட்டி, “நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்” என்று மனமுருக பாடுகிறான் சேகர். (இதுவும் கா.மு.ஷெரீப் பாடல்)

தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்

என்று முதல் சரணத்தில் குழந்தை உள்ளம் தரும் இன்பத்தையும்

அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
பண்பே அறியா பாபியர்கள்
வாழுகிற பூமியிது, நீ அறிவாய்!

என்று இரண்டாவது சரணத்தில் கயமை நிறைந்த உலகத்தைப் பற்றிய எச்சரிக்கையும் பாடலில் அமைந்திருப்பது அனுபவிக்கத்தக்கது.

– வாமனன் (திரை இசை வரலாறு)

1956இல் வந்த படம். சிவாஜி, ஜி. வரலக்ஷ்மி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, எம்.என். ராஜம் நடித்திருக்கிறார்கள். ஜி. ராமநாதன் இசை. ஏ.பி. நாகராஜன் கதை வசனம். ஏ.பி. நாகராஜன் இதிலும் ஒரு தருமி-நக்கீரன்-சிவன் காட்சியை வடித்திருக்கிறார். சிவாஜியே நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். திருவிளையாடல் படக் காட்சியில் இந்தக் காட்சியின் தாக்கம் தெரிகிறது. ஜி. வரலக்ஷ்மி அரிச்சந்திரா படத்திலும் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.

“காட்டுக்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது” என்ற lowbrow பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. சுலபமான சந்தத்தில், நல்ல தாளத்தோடு அமைந்திருந்தது. திடீரென்று வீதியில் இரண்டு பேர் வந்து பாட்டுப் பாடி டான்ஸும் ஆடி பணம் சம்பாதிப்பார்கள். நான் சில பாம்பு பிடாரன்களைப் பார்த்திருக்கிறேன். லேகியம் விற்கும் மோடி மஸ்தான்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் இப்படி எந்த டான்ஸையும் பார்த்ததில்லை. இப்படி உண்மையிலேயே அந்தக் காலத்தில் நடக்குமா? இல்லை உடான்ஸா? யாராவது பார்த்திருக்கிறீர்களா?

“பூவா மரமும் பூத்ததே” என்ற பாட்டு பிரபலமானது. ஜிக்கியின் குரலில் ஒரு துள்ளல் இருக்கிறது.

“வாழ்ந்தாலும் ஏசும்”, ”நான் பெற்ற செல்வம்” என்ற பாட்டுக்கள் இன்றும் கேட்கப்படுகின்றன. டி.எம். சவுந்தரராஜன் 50களில் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில்தான் பாடுவார். இந்தப் பாடல்களில் அதை நன்றாக உணரலாம். அவரது ஆதர்சமான தியாகராஜ பாகவதரின் தாக்கம்தான்.

“மாதா பிதா குரு தெய்வம்” என்பதும் நல்ல பாட்டு.

கொஞ்சமாகவே திரைப் பாடல்கள் எழுதி இருக்கும் கா.மு. ஷெரிப் இந்தப் படத்தில் பல பாட்டுக்களை எழுதி இருக்கிறார். “காட்டுக்குள்ளே கண்ட பூவு”, “பூவா மரமும்”, “. நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” அவர் எழுதியவையே.

“நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

கதை என்னவோ இழுவைதான். அப்பா சாரங்கபாணியை எதிர்த்துக்கொண்டு ஏழை வரலக்ஷ்மியை மணக்கும் சிவாஜி வாழ்க்கையில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் படுவார். ஏழ்மையிலே தவிப்பார், ஆனால் வேலை கீலை எதுவும் தேடாமல் தன் ஏழ்மையைப் பற்றியும் அப்பாவின் கடின உள்ளத்தையும் பற்றி நீள நீள வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாத அவரது மைத்துனர் நம்பியார் வீட்டை விட்டு ஓடி தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்து தலையில் அடிபட்டு பைத்தியமாகிவிடுவார். அவர் வீட்டை விட்டு ஓடியது சிவாஜியின் நீள நீள வசனங்களை தாங்கமுடியாமல்தான் என்று நான் யூகிக்கிறேன். வேலை கிடைக்காத துயரத்தாலோ என்னவோ, சிவாஜி நடுவில் தனது மனைவியை கர்ப்பமும் ஆக்கிவிடுவார். தப்பித் தவறி அவருக்கு ஒரு வேலை கிடைக்கும், ஆனால் அவரது அப்பாவே அந்த வேலையையும் பறித்துவிடுவார். உடனே சிவாஜி “வாழ்ந்தாலும் ஏசும்” என்று பாட்டு பாடிக்கொண்டே நெடுந்தூரம் தன் மனைவியோடு நடந்து செல்வார். மனைவிக்கு மருந்து வாங்கப் பணம் இல்லாமல் திருடப் போவார். ஆனால் அங்கே அவரை மன்னித்து விட்டுவிடுவார்கள். என்னடா ஜெயிலுக்கு போகாமல் தப்பித்துவிட்டாரே, உணர்ச்சி பொங்க வசனம் பேசும் ஒரு வாய்ப்பு போய்விட்டதே என்று நினைத்தால், அந்த செய்தி தெரிந்து அவர் மனைவி அவமானத்தால் இறந்துவிடுவார். அப்போது சிவாஜி தன் சுயரூபத்தைக் காட்டி சிம்மக் குரலில் வசனம் பேசுவார். படம் முடியும் வேளையில் தன் காணாமல் போன மகனை தேடும் போது அவரை போலிஸ்காரர்கள் திருடன் என்று நினைத்து கைது செய்துவிடுவார்கள். அவரும் “நான் இந்த செல்வத்தை அல்ல, நான் பெற்ற செல்வத்தைத்தான் தேடுகிறேன்” என்று நமது கண்களை குளமாக்குவார். அவரும் அழுது, நம்மையும் அழவைத்துவிட்டு, கடைசியில் சிவாஜியும் அவரது அப்பாவும் 2 நாட்களுக்கு முன்னால் காணாமல் போன அவரது மகனும் சிறு வயதில் காணாமல் போன சிவாஜியின் தங்கையும் வீட்டை விட்டு ஓடிப் போய் பைத்தியமாக இருந்து குணமான சிவாஜியின் மைத்துனரும் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்! செத்துப் போன மனைவியும், முதல் அரை மணி நேரத்திலேயே செத்துப் போன சிவாஜியின் மாமாவும் உயிர் பிழைத்து வந்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். Director missed a trick!

பாட்டுக்களை மட்டும் கேட்கலாம்.

Posted by RV in the blog
அவார்டா கொடுக்குறாங்க? வலைப்பதிவில் திரு, R.V. பதிந்தது (19.8.2008)

Thanks to Rv for his wonderful review

 

பாட்டும் நானே! பாவமும் நானே!

ஏ.பி.நாகராஜன் இயக்கி அபார வெற்றியை அடைந்த படம் திருவிளையாடல்.  திரையுலக வரலாற்றில் தன்னிகரில்லா சாதனை புரிந்த படம் இது. படத்தில் இப்பாடலை எழுதியது கவிஞர் கண்ணதாசன் என்று பெயர் வெளியாகியது. உண்மையிலேயே இப்பாடலை எழுதியது கவி கா.மு.ஷெரீப் அவர்களேதான். கே.வி.மகாதேவன் இசையமைக்க, டி.எம்.செளந்தர்ராஜன் பாட,  காணடா ராகத்தில் அமைந்த பாடல் இது :

பாட்டும் நானே பாவமும் நானே –
பாடும் உனை நான் பாட வைத்தேனே!
கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ?

(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகம் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே!

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா – உன் ஆணவம் பெரிதா?

ஆலவாய னோடுபாட வந்தவனின்
பாடும் வாயை இனி மூட வந்ததொரு…..

(பாட்டும்)

படம்: திருவிளையாடல் (வருடம் – 1965)

 

பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே!

படம் : தேவகி
நடித்தவர்கள் : என்.என்.கண்ணப்பா & வி.என்.ஜானகி
பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் & பி. லீலா
இசை : ஜி.ராமனாதன்
இயற்றியவர் : கவி கா.மு.ஷெரீப்

பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே !
தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே ( 2 தடவை)

ஆஆஆஆ..ஆஆஆஆ…..ஆஆஆஆ…
செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
ஆஆஆ…ஆஆ..ஆஆஆஆஆ..

சீராக‌வே நாம் வாழ்ந்திடுவோம்
சீராக‌வே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேர‌வே துன்ப‌ம் நீங்குமே
எந்நாளுமே இன்ப‌ம் ஓங்குமே

சீராக‌வே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேர‌வே துன்ப‌ம் நீங்குமே
எந்நாளுமே இன்ப‌ம் ஓங்குமே
எண்ணம் போலே யாவுமே
மெய்யாக‌வே நேருமே
எண்ணம் போலே யாவுமே
மெய்யாக‌வே நேருமே
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே

ஆஆஆஆ..ஆஆஆஆ…..ஆஆஆஆ…
வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும்
இன்பம் நாம் அடைவோம்
வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும்
இன்பம் நாம் அடைவோம்
ஆஆஆ…ஆஆ..ஆஆஆஆஆ..
ஆராரோ என்றே ஆசையுட‌ன்
ஆராரோ என்றே ஆசையுட‌ன்
நீயும் பாடுவாய்
பைய‌ன் தூங்குவான்
ஆனந்தாய் நான் காணுவேன்
ஆராரோ என்றே ஆசையுட‌ன்
ஆராரோ என்றே ஆசையுட‌ன்
நீயும் பாடுவாய்
பைய‌ன் தூங்குவான்
ஆனந்தாய் நான் காணுவேன்
எண்ணம் போலே யாவுமே
மெய்யாக‌வே நேருமே
எண்ணம் போலே யாவுமே
மெய்யாக‌வே நேருமே
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே

பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே !

 

பாத்தா பசுமரம்

திருவிளையாடல்” படத்தின் கடைசிப் பாடல் பற்றிய ஒரு சுவாரஸ்ய விஷயம். இந்தப் பாடலை “திரை இசைத்திலகம்” கே.வி.மகாதேவன் எதிர்பார்த்த அளவுக்கு “கவியரசு” கண்ணதாசனால் பாடல் எழுதித் தரமுடியவில்லை. எப்பொழுதுமே கே.வி.மகாதேவனைப் பொறுத்தவரை “பாட்டுக்குத்தான் மெட்டு” என்பார். “முதல்ல பாட்டை எழுதிக் கொடுய்யா” என்பார்.

இப்படி இந்த “க்ளைமாக்ஸ்” பாடலுக்கு எவ்வளவோ முயன்றும் கே.வி.எம். நினைத்த மாதிரி கண்ணதாசனால் பாட்டு கொடுக்கவில்லை. கடைசியில் கவிஞர் கா.மு.ஷெரீப்தான் மகாதேவனையும், டைரக்டர் ஏ.பி.நாகராஜனையும் திருப்திபடுத்த முடிந்தது. படத்தின் மீதி அத்தனை பாடல்களையும் பத்து பாடல்களுக்கு மேல் அற்புதமாக எழுதியிருப்பார் கண்ணதாசன்.

இங்கே தான் ஒரு நாகரீக பிரமிப்பு நடந்தது.இந்த ஒரு பாடலுக்கு “கவிஞர் கா.மு.ஷெரீப் ” பெயரை போட்டுவிட்டு மீதி அனைத்துப் பாடல்களுக்கும் “கண்ணதாசன்” பெயரை டைட்டிலில் போடப் போனபோது, “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொன்னார் கா.மு.ஷெரீப்.

இன்னும் இந்தப் பாடலை கண்ணதாசன் என்றே போற்றிய வண்ணம் உள்ளோம்.

தகவல் : விஜயராம் ஏ. கண்ணன்

அந்த பாடல் இதுதான்:

பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா – ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா? – (பாத்தா)

கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா – நீட்டி
கட்டையிலே படுத்து விட்டா காசுக்காகுமா?
வட்டமிடும் காளையைப் பார் வாட்ட சாட்டமா – கூனி
வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா? – (பாத்தா)

பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு – இவரு
போன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு – ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு – (பாத்தா)

அறுவடையை முடிக்கு முன்னே வெதைக்க லாகுமா – அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா?
பத்துப் பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா – இந்தப்
பாவி மகளுக் கெந்த நாளும் கர்ப்ப வேஷமா? – (பாத்தா)

படம் – திருவிளையாடல் – வருடம் 1965

 

பணம் பந்தியிலே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதை
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை
பிழைக்கும் மனிதனில்லை

ஒண்ணும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே – அவனை
உயர்த்தி பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை – உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான் – பணம்
அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உன்னைத்தான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (2) – இதை
பார்த்து எண்ணி பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

உன்னால் உயர்ந்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு (2) – நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

திரைப்படம் – பணம் பந்தியிலே
பாடலாக்கம் : கவி கா.மு. ஷெரீப்
இசை – கே. வி. மகாதேவன்
பாடியவர் – T. M. சௌந்தரராஜன்

வெளியீடு – 7 – நவம்பர் 1961

(பணம் பந்தியிலே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்)