RSS

Category Archives: நான் பெற்ற செல்வம்

நான் பெற்ற செல்வம்

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்கார செல்வம்!

ஜி. ராமநாதனின் இசையில் கா.மு.ஷெரீப் எழுதி ‘நான் பெற்ற செல்வம்’. என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது!

திரையில் சிவாஜி கணேசன் தன் குழந்தையிடம் பாடுவதாக அமைந்திருக்கும். டி.எம்.எஸ் தன் கம்பீரமான குரலில் அருமையாகப் பாடியிருப்பார். ஜோன்பூரி ராகத்தில் இழைத்த பாடல்.

தமிழ்த்திரைப்படங்களில் இதுவரை குழந்தைகளை முன்னிலைப்படுத்தி எத்தனயோ பாடல்கள் வந்திருக்கின்றன! ஆனால் கருத்தாழத்தில் இதை மிஞ்சிய பாடல் எதுவுமில்லை என்றுதான் சொல்வேன். அதுவும் இப்பாடலின் இடையே சில அருமையான வரிகள் வரும்.

“ தொட்டால் மணக்கும் ஜவ்வாது!
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு!
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்!”

எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த வரிகளில் குழந்தையின் பெருமையை! தொட்டால் மணக்கும் ஜவ்வாது.. சுவைத்தால் மட்டுமே தேன்பாகின் இனிப்பு தெரியும். ஆனால் அந்தக் குழந்தை தொலைவில் இருந்தால்கூட, அதை நினைக்கும்போதே ஜவ்வாதின் மணத்தையும் தேனின் சுவையையும் மனதால் உணர முடியும்! எத்தனை அழகான கற்பனை!

 

நான் பெற்ற செல்வம்

தி.மு.கழகத்தின் சார்புள்ள நடிகராக கருதப்பட்ட சிவாஜி கணேசன், அந்த பிம்பத்தை மாற்ற 1955-ல் குடும்பத்தோடு திருப்பதி சென்று வந்தார். இதன் காரணமாக தி.மு.க.விற்கு எதிரணியில் இருந்த தமிழரசுக் கட்சியின் சார்புகொண்ட ஏ.பி.நாகராஜன் போன்றவர்கள் சிவாஜி பக்கம் வந்தார்கள்.

ஏ.பி.என்.னின் கதை வசனத்தில் முதன்முறையாக “நான் பெற்ற செல்வம்” என்ற படத்தில் சிவாஜி நடித்தார்.

பணத்தாசை பிடித்த தந்தையை எதிர்த்து, வீட்டைவிட்டு வெளியேறி தன் மாமன் மகளான கெளரியை மணக்கிறான் சேகர்.

பல இன்னல்களுக்குப் பிறகு, ஒரு பிள்ளையை ஈன்றுவிட்டு இறந்து போகிறாள் கெளரி.

கசப்பான அனுபவங்கள் “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்” என்று சேகரைப் பாட வைக்கின்றன. (பாடலாக்கம் கவி கா.மு.ஷெரீப்)

தன் மகனைச் சீராட்டி, “நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்” என்று மனமுருக பாடுகிறான் சேகர். (இதுவும் கா.மு.ஷெரீப் பாடல்)

தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்

என்று முதல் சரணத்தில் குழந்தை உள்ளம் தரும் இன்பத்தையும்

அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
பண்பே அறியா பாபியர்கள்
வாழுகிற பூமியிது, நீ அறிவாய்!

என்று இரண்டாவது சரணத்தில் கயமை நிறைந்த உலகத்தைப் பற்றிய எச்சரிக்கையும் பாடலில் அமைந்திருப்பது அனுபவிக்கத்தக்கது.

– வாமனன் (திரை இசை வரலாறு)

1956இல் வந்த படம். சிவாஜி, ஜி. வரலக்ஷ்மி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, எம்.என். ராஜம் நடித்திருக்கிறார்கள். ஜி. ராமநாதன் இசை. ஏ.பி. நாகராஜன் கதை வசனம். ஏ.பி. நாகராஜன் இதிலும் ஒரு தருமி-நக்கீரன்-சிவன் காட்சியை வடித்திருக்கிறார். சிவாஜியே நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். திருவிளையாடல் படக் காட்சியில் இந்தக் காட்சியின் தாக்கம் தெரிகிறது. ஜி. வரலக்ஷ்மி அரிச்சந்திரா படத்திலும் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.

“காட்டுக்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது” என்ற lowbrow பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. சுலபமான சந்தத்தில், நல்ல தாளத்தோடு அமைந்திருந்தது. திடீரென்று வீதியில் இரண்டு பேர் வந்து பாட்டுப் பாடி டான்ஸும் ஆடி பணம் சம்பாதிப்பார்கள். நான் சில பாம்பு பிடாரன்களைப் பார்த்திருக்கிறேன். லேகியம் விற்கும் மோடி மஸ்தான்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் இப்படி எந்த டான்ஸையும் பார்த்ததில்லை. இப்படி உண்மையிலேயே அந்தக் காலத்தில் நடக்குமா? இல்லை உடான்ஸா? யாராவது பார்த்திருக்கிறீர்களா?

“பூவா மரமும் பூத்ததே” என்ற பாட்டு பிரபலமானது. ஜிக்கியின் குரலில் ஒரு துள்ளல் இருக்கிறது.

“வாழ்ந்தாலும் ஏசும்”, ”நான் பெற்ற செல்வம்” என்ற பாட்டுக்கள் இன்றும் கேட்கப்படுகின்றன. டி.எம். சவுந்தரராஜன் 50களில் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில்தான் பாடுவார். இந்தப் பாடல்களில் அதை நன்றாக உணரலாம். அவரது ஆதர்சமான தியாகராஜ பாகவதரின் தாக்கம்தான்.

“மாதா பிதா குரு தெய்வம்” என்பதும் நல்ல பாட்டு.

கொஞ்சமாகவே திரைப் பாடல்கள் எழுதி இருக்கும் கா.மு. ஷெரிப் இந்தப் படத்தில் பல பாட்டுக்களை எழுதி இருக்கிறார். “காட்டுக்குள்ளே கண்ட பூவு”, “பூவா மரமும்”, “. நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” அவர் எழுதியவையே.

“நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

கதை என்னவோ இழுவைதான். அப்பா சாரங்கபாணியை எதிர்த்துக்கொண்டு ஏழை வரலக்ஷ்மியை மணக்கும் சிவாஜி வாழ்க்கையில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் படுவார். ஏழ்மையிலே தவிப்பார், ஆனால் வேலை கீலை எதுவும் தேடாமல் தன் ஏழ்மையைப் பற்றியும் அப்பாவின் கடின உள்ளத்தையும் பற்றி நீள நீள வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாத அவரது மைத்துனர் நம்பியார் வீட்டை விட்டு ஓடி தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்து தலையில் அடிபட்டு பைத்தியமாகிவிடுவார். அவர் வீட்டை விட்டு ஓடியது சிவாஜியின் நீள நீள வசனங்களை தாங்கமுடியாமல்தான் என்று நான் யூகிக்கிறேன். வேலை கிடைக்காத துயரத்தாலோ என்னவோ, சிவாஜி நடுவில் தனது மனைவியை கர்ப்பமும் ஆக்கிவிடுவார். தப்பித் தவறி அவருக்கு ஒரு வேலை கிடைக்கும், ஆனால் அவரது அப்பாவே அந்த வேலையையும் பறித்துவிடுவார். உடனே சிவாஜி “வாழ்ந்தாலும் ஏசும்” என்று பாட்டு பாடிக்கொண்டே நெடுந்தூரம் தன் மனைவியோடு நடந்து செல்வார். மனைவிக்கு மருந்து வாங்கப் பணம் இல்லாமல் திருடப் போவார். ஆனால் அங்கே அவரை மன்னித்து விட்டுவிடுவார்கள். என்னடா ஜெயிலுக்கு போகாமல் தப்பித்துவிட்டாரே, உணர்ச்சி பொங்க வசனம் பேசும் ஒரு வாய்ப்பு போய்விட்டதே என்று நினைத்தால், அந்த செய்தி தெரிந்து அவர் மனைவி அவமானத்தால் இறந்துவிடுவார். அப்போது சிவாஜி தன் சுயரூபத்தைக் காட்டி சிம்மக் குரலில் வசனம் பேசுவார். படம் முடியும் வேளையில் தன் காணாமல் போன மகனை தேடும் போது அவரை போலிஸ்காரர்கள் திருடன் என்று நினைத்து கைது செய்துவிடுவார்கள். அவரும் “நான் இந்த செல்வத்தை அல்ல, நான் பெற்ற செல்வத்தைத்தான் தேடுகிறேன்” என்று நமது கண்களை குளமாக்குவார். அவரும் அழுது, நம்மையும் அழவைத்துவிட்டு, கடைசியில் சிவாஜியும் அவரது அப்பாவும் 2 நாட்களுக்கு முன்னால் காணாமல் போன அவரது மகனும் சிறு வயதில் காணாமல் போன சிவாஜியின் தங்கையும் வீட்டை விட்டு ஓடிப் போய் பைத்தியமாக இருந்து குணமான சிவாஜியின் மைத்துனரும் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்! செத்துப் போன மனைவியும், முதல் அரை மணி நேரத்திலேயே செத்துப் போன சிவாஜியின் மாமாவும் உயிர் பிழைத்து வந்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். Director missed a trick!

பாட்டுக்களை மட்டும் கேட்கலாம்.

Posted by RV in the blog
அவார்டா கொடுக்குறாங்க? வலைப்பதிவில் திரு, R.V. பதிந்தது (19.8.2008)

Thanks to Rv for his wonderful review