திருவிளையாடல்” படத்தின் கடைசிப் பாடல் பற்றிய ஒரு சுவாரஸ்ய விஷயம். இந்தப் பாடலை “திரை இசைத்திலகம்” கே.வி.மகாதேவன் எதிர்பார்த்த அளவுக்கு “கவியரசு” கண்ணதாசனால் பாடல் எழுதித் தரமுடியவில்லை. எப்பொழுதுமே கே.வி.மகாதேவனைப் பொறுத்தவரை “பாட்டுக்குத்தான் மெட்டு” என்பார். “முதல்ல பாட்டை எழுதிக் கொடுய்யா” என்பார்.
இப்படி இந்த “க்ளைமாக்ஸ்” பாடலுக்கு எவ்வளவோ முயன்றும் கே.வி.எம். நினைத்த மாதிரி கண்ணதாசனால் பாட்டு கொடுக்கவில்லை. கடைசியில் கவிஞர் கா.மு.ஷெரீப்தான் மகாதேவனையும், டைரக்டர் ஏ.பி.நாகராஜனையும் திருப்திபடுத்த முடிந்தது. படத்தின் மீதி அத்தனை பாடல்களையும் பத்து பாடல்களுக்கு மேல் அற்புதமாக எழுதியிருப்பார் கண்ணதாசன்.
இங்கே தான் ஒரு நாகரீக பிரமிப்பு நடந்தது.இந்த ஒரு பாடலுக்கு “கவிஞர் கா.மு.ஷெரீப் ” பெயரை போட்டுவிட்டு மீதி அனைத்துப் பாடல்களுக்கும் “கண்ணதாசன்” பெயரை டைட்டிலில் போடப் போனபோது, “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொன்னார் கா.மு.ஷெரீப்.
இன்னும் இந்தப் பாடலை கண்ணதாசன் என்றே போற்றிய வண்ணம் உள்ளோம்.
தகவல் : விஜயராம் ஏ. கண்ணன்
அந்த பாடல் இதுதான்:
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா – ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா? – (பாத்தா)
கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா – நீட்டி
கட்டையிலே படுத்து விட்டா காசுக்காகுமா?
வட்டமிடும் காளையைப் பார் வாட்ட சாட்டமா – கூனி
வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா? – (பாத்தா)
பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு – இவரு
போன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு – ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு – (பாத்தா)
அறுவடையை முடிக்கு முன்னே வெதைக்க லாகுமா – அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா?
பத்துப் பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா – இந்தப்
பாவி மகளுக் கெந்த நாளும் கர்ப்ப வேஷமா? – (பாத்தா)
படம் – திருவிளையாடல் – வருடம் 1965