RSS

Category Archives: வீரபாண்டியனின் விமர்சனம்

வீரபாண்டியனின் விமர்சனம்

veera-pandiyan

ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே…!”

இந்தத் திரைப்பாடல் இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நம் சிந்தையில் சந்தனம் பூசும்! இந்தச் சங்கீத வரிகளுக்குச் சொந்தக்காரர் கவி கா.மு. ஷெரீப். அவர் பட்டெழுதிப் பேர் வாங்கிய புலவர் மட்டுமல்லர்; மகத்தான மனிதர். சுதந்திரப் போராட்டத் தியாகி. இவரும் என் தந்தையும் நண்பர்கள். நண்பனின் பிள்ளை என்பதால் என்னை அவர் அரவணைத்தார்.

நான் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது அன்றாடம் அவரோடு அணுக்கமாயிருக்கும் பேறு பெற்றேன். அந்த அணுக்கம், மானுட வாழ்வின் மகத்தான பகுதிகளை என் மீது வெளிச்சம் போட்டு விளங்க வைத்தது. அவர் மதம் கடந்த மனிதர். ஆனால் மதக் கோட்பாடுகளை உள்ளுக்குள் வாங்கி, அதன் நடைமுறை வடிவமாய் நடந்து காட்டியவர்.

புத்தகத்தில் பேசப்படும் தத்துவங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதென்பது சாத்தியமேயில்லை என்பார்கள் சராசரிகள். அது, சாத்தியம் தான் என்பதற்கான கண்கண்ட சாட்சியம் தான் கவி கா.மு. ஷெரீப் போன்ற கருணாமூர்த்திகள்.

“இஸ்லாம்’ என்னும் தத்துவ உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சி எடுக்கப்பட்ட பட்டறை இரும்பு அந்தப் பட்டுப் புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்வைப் பயின்றால் -அவரது தோழர்கள் சொல்லும் ஹதீஸ்களைச் சற்றே செவிமடுத்தால் -திருமறையாம் குர்ஆன் கூறும் விழுமங்களை விளங்கிக் கொண்டால் -நம் சித்தத்தில் மொத்தமாய் என்ன தோன்றுமோ அதுவே தனது வாழ்வென வடித்துக் கொண்டவர் அவர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மனச்சாட்சியின் காவலராய் இருந்தவர். பட அதிபர் எம்.ஏ. வேணுவின் இதயத்தில் கொலுவிருந்தவர். இத்தனை வாய்ப்புகள் வைத்துக் கோடிக்கு அதிபதியாய்க் கோபுரத்தில் உட்கார்ந்திருக்க முடியும். ஆனால், கடைசி வரை வாடகை வீட்டில் குடியிருந்தார். “உங்களுக்குத்தான் முதலமைச்சர் மிகவும் வேண்டியவராயிற்றே… ஒரு வீடு கேளுங்களேன்…!’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்!” என்றார் அவர்.

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் ஐம்பதாவது பொன்விழா. விழாவில் அவருக்கு ஐம்பது பவுன் பரிசளிப்பதென்று நண்பர்கள் கூடி முடிவு செய்தனர். விழாக் குழுவின் முன்னோடியாய் நின்று உழைத்தார் ஷெரீப். விழா நெருங்குகிற நாள் வரை பாதி அளவுக்கு மேல் பவுன் தேறவில்லை. பார்த்தார் ஷெரீப்; “சொன்னது சொன்னபடி சொர்ணத்தைக் கொடுத்துவிட வேண்டும்’ என்று உறுதி பூண்டார். தன் வாழ்க்கைத் துணைவியின் மேனியில் மின்னிக்கிடந்த பொன்னகைகளைக் கழற்றி எடுத்துப் பாதியளவோடு, மீதியளவையும் சேர்த்து, ஊருக்கும், உலகுக்கும் தெரியாமல் உவந்தளித்தார் அந்த உத்தமர். பின்னர் அந்தத் தொகைதான் கார் நிதியாக மாற்றி, சிலம்புச் செல்வர் பயணம் போகும் “பியட்’ காராகப் பரிசளிக்கப்பட்டது.

“அல்லாஹ்வின் தூதர் ஓர் அழகிய முன் மாதிரி’ என்று திருவசனம் தெரிவிக்கிறது. அந்த முன் மாதிரியைப் பின்பற்றிய இவரும் ஒரு முன்மாதிரிதான். “வலக்கையில் சூரியனையும், இடக்கையில் சந்திரனையும் தந்தாலும் நாம் நமது கொள்கையை விடப்போவதில்லை’ என்னும் நாயகத்தின் வார்த்தைகளுக்கு இவரும் ஒரு வாழும் இலக்கணம்.

இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண்; காதலன் கைவிட்டுவிட்டான். பெண்ணின் தகப்பனார் கவிஞரின் நேசத்துக்குரிய நண்பர். இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். “குடும்ப மானம் கப்பலேறிவிடும்!’ என்று குமைந்தார். என்ன செய்தார் தெரியுமா ஷெரீப்?

“உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பைக் கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்…” என்று சொல்லி, தன் மனைவியையும், கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிருக்கும் “வேலுகுடி’ என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். குழந்தை பிறந்ததும், பெண்ணைச் சத்தமின்றி தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி, வளர்த்து ஆளாக்கினார்.

இலக்கியத்தில் – காவியத்தில்கூட காணக் கிடைக்காத ஈடற்ற தியாகம் இது. ஆம்! இந்துக் குழந்தை, இஸ்லாமியத் தாயின் பாலருத்தி வளர்ந்தது…! இந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவர் முஸ்லிம் தாயின் பாலருந்தி வளர்ந்ததை நம் நெஞ்சில் பதிப்பது நல்லது; தமிழகத்தின் தனிப் பெரும் மரபு இது. அதுதான் மதம் கடந்த மனிதநேயம்!

தான் பெற்ற பிள்ளைக்கு அரசாங்கப் பதவி கேட்கச் சொன்ன உறவினர்களுக்கு நமது கவிஞர் தந்த பதில், புன்முறுவல்தான். எம்.ஜி.ஆர். தன் மனத்தில் வைத்துப் போற்றிய மகத்தான மனிதர் இவர். அவர் முதல்வரானதும் தன் தூதுவர்களை அனுப்பி, எத்தனையோ முறை தன் இல்லத்திற்கு அழைத்தார். நான், “ராமாவரம் போகாவரம் வாங்கி வந்திருக்கிறேன்…!’ என்றார் இவர். ஆம்! துறவிக்கு வேந்தனும் துரும்பு.

எல்லா மதங்களும், மார்க்கங்களும் இந்த நெறியையும் நேர்மையையுமே வலியுறுத்துகின்றன. மதங்கள் வேறாகலாம்; மகான்கள் பொதுவானவர்கள். இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்ள காலம் நமக்குக் கருணை காட்டட்டும்.

– வீரபாண்டியன்

ந்ன்றி : தினமணி ஈகைப் பெருநாள் மலர்