கவி.கா.மு.ஷெரீப் அன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் எனும் சிற்றூரில் பிறந்தவர்.இவர் 11–8–1914இல் பிறந்தார். 1973 அக்டோபர் 10ஆம் தேதி காலமானார். தஞ்சை மாவட்டக் காரரான இவருக்கு தேசியமும், மொழியும் இரு கண்களாக இருந்தன. சின்ன வயதில் மற்ற திரைத்துறை கவிஞர்களைப் போலவே இவரும் பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். பின்னர் இவரது பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெறலாயின. அப்படிப் புகழ் பெற்ற பாடல்களின் வரிசை மிகப் பெரிது. முதன் முதலாக இவர் 1948இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “மாயாவதி” எனும் படத்திற்குத்தான் பாடல் இயற்றினார். முதல் பாட்டை ஏ.பி.கோமளா எனும் பாடகிதான் பாடினார். அதனைத் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் மிக விரைவாகத் தொடர்ந்தது.
ம.பொ.சி.யின் நிழல் போல செயல்பட்ட இவரும் “தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற இதழ்களை நடத்தினார். ஜானிகான் ஜான் தெரு, தேனாம்பேட்டையில் இவரது அலுவலகம் அமைந்திருந்தது. பிரபலமான அரசியல் வாதியாகவும், திரைத்துறை ப் பிரமுகராகவும் இவர் இருந்தார். இவர் இளமையில் திருவாரூரில் இருந்த சமயம் “ஒளி” எனும் பத்திரிகையை நடத்தி வந்தார். பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிவரும் நாளில் இவரது சிபாரிசின் பேரில்தான் கருணாநிதி சேலம் மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்தார்.
“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை கவியரசர் கண்ணதாசனிடம் இருந்து ஏ.பி.என் எதிர்பார்த்தார்.
Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.
‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும்.
‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு. அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு. நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.
-திரு.ஜெயகாந்தனின். “ ஒரு இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்” பக்கம்.112.
(திரு கா.மு.ஷெரீஃப் அவர்கள் சிவலீலா என்னும் நாடகத்திற்காக எழுதிய பாடல்-பாட்டும் நானே பாவமும் நானே…திருவிளையாடல் படத்திற்குப் பாடல் தேவைப்பட்டபோது ,இதைப் பயன்படுத்த ஏபிஎன் விரும்பினார்.திரு காமு ஷெரீஃப் அனுமதியுடன் கண்ணதாசன் பெயரில் பாடல் வெளிவந்தது.காமு ஷெரிஃப்- கண்ணதாசனுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அவர் பெயரில் போட்டுக் கொள்ளட்டும்.கண்ணதாசன்–திரு ஷெரீஃப் அய்யாவிற்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதமே.இவ்வாறு ஒரு பத்திரிகைச்செய்தி)
கவிஞர் கா.மு. ஷெரீஃப் அவர்கள் திரைத்துறையில் பல சிறப்பான பாடல்களை எழுதி புகழ் பெற்றவர்.அவர் ஒருபோதும் ஆபாசப் பாடல் எழுதி பொருள் ஈட்டியதில்லை. அவரது திரை இலக்கிய பாடல்கள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. “டவுன்பஸ்’ என்ற படத்திற்காக எழுதிய “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? “,மாங்கல்யம் படத்தில் இடம்பெறும் “ பொன்னான வாழ்வு மண்ணாகலாமா?”, எனும் சோகப்பாட்டு, பணம் பந்தியிலே- படத்திற்காக, “ பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லை பிழைக்கும் மனிதனில்லை”, சிவகாமி படத்தில் வரும் “ வானில் முழு மதியைக்கண்டேன் “, மக்களைப்பெற்ற மகராசியில் “ ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக்காதல் மாறிப்போகுமா?, அன்னையின் ஆணையில், “ அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை, அவர் அடி தொழ மறந்தவர் மனிதனில்லை”. நான் பெற்ற செல்வத்தில் இடம் பெரும் மிகப்பிரபலமான பாடல் “ வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா!” அருமையான மேட்டில் வரும், 1957 ல் வெளிவந்த “முதலாளி” திரைப்படத்தில் “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே! “போன்ற பாடல்கள் என்றும் நெஞ்சில் நிறைந்தவை.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். “அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி” என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்” என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்தின் மனச்சாட்சியின் காவலராய் இருந்தவர். பட அதிபர் எம்.ஏ. வேணுவின் இதயத்தில் கொலுவிருந்தவர். இத்தனை வாய்ப்புகள் வைத்துக் கோடிக்கு அதிபதியாய்க் கோபுரத்தில் உட்கார்ந்திருக்க முடியும். ஆனால், கடைசி வரை வாடகை வீட்டில் குடியிருந்தார். “உங்களுக்குத்தான் முதலமைச்சர் மிகவும் வேண்டியவராயிற்றே… ஒரு வீடு கேளுங்களேன்…!’ என்றனர் நண்பர்கள். “நான் வல்ல இறைவனையன்றி வேறு எவரிடமும் கையேந்த மாட்டேன்!” என்றார் அவர்.
தான் பெற்ற பிள்ளைக்கு அரசாங்கப் பதவி கேட்கச் சொன்ன உறவினர்களுக்கு நமது கவிஞர் தந்த பதில், புன்முறுவல்தான். எம்.ஜி.ஆர். தன் மனத்தில் வைத்துப் போற்றிய மகத்தான மனிதர் இவர். அவர் முதல்வரானதும் தன் தூதுவர்களை அனுப்பி, எத்தனையோ முறை தன் இல்லத்திற்கு அழைத்தார். நான், “ராமாவரம் போகாவரம் வாங்கி வந்திருக்கிறேன்…!’ என்றார் இவர். ஆம்! துறவிக்கு வேந்தனும் துரும்பு.
திருச்சி லோகநாதன்,ஜிக்கி பாடிய “வாராய் நீ வாராய்” என்ற அருமையான பாடலில் உள்ள புதுமை இதை மருதகாசி, கா.மு. ஷெரீஃப் இரண்டு கவிஞர்கள் எழுதியிருப்பதுதான். எந்த வரி யாருடையது என்று தெரியாது.இதே படத்தில் இடம்பெற்ற “உலவும் தென்றல் காற்றினிலே” பாடல் கூட இரு கவிஞர்களும் எழுதியதுதான்.
இப்படி ஒன்றுபட்ட இரு கவிஞர்கள் எழுதிய பாடல்கள் இன்று காண முடியாது.ஆனால் இதே தேவரின் “ தேர்த்திருவிழா “படத்தில் எம் ஜி ஆர்-ஜெயலலிதா டூயட்டுக்காக கவிஞர் மருதகாசி எழுதிய
ஏ…குட்டி! என்னா குட்டி… எகுறிப்போகும் கன்னுக்குட்டி!
உட்டாலக்கடி கும்தலக்க கும்மா!
உசிலம்பட்டி வயசுக்குட்டி ஒய்லாட்டும் கன்னுக்குட்டி!
உட்டாலக்கடி கும்தலக்கடி கும்மா!
இந்த உட்டாலக்கடி பாடலைக் கேட்டவுடன், இனிமேல் நான் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போவதில்லை, என்று கூறி கவிஞர் கா.மு. ஷெரீஃப் திரைப்படத்துரையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.
“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.
காசுக்கு காலைத்தூக்குபவர்கள் போல், எழுது—கோலைத் தூக்குபவர்களே இன்றைய கவிஞர்கள். எப்படியாவது பொருள் தேடவேண்டும்.சமூகம் நாசமாகப் போவது பற்றி எந்தக்கவலையும் இவர்களுக்கு இல்லை.
நன்றி : ஷாலி
சுவனப்பிரியன் வலைப்பதிவிலிருந்து
johan paris
11/09/2014 at 11:52 am
கவி.கா.மு.ஷெரீப்-பற்றிய பல சுவையான தகவல்கள். இந்த “பாட்டும் நானே” பாடல் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் பலர் இதை இன்றும் நம்புகிறார்களில்லை.ஒன்று உண்மை இந்த சர்ச்சை பேசப்பட்ட காலத்தில் எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதுவே உண்மைக்குச் சான்று.
இலங்கை வானொலி சில நிகழ்ச்சிகளில் பாடலாசிரியர் பெயர் சொல்லும் போது , இவர் பெயரைக் கேட்டுள்ளேன். திரைப்படப்பாடலாசிரியர்கள் பலருக்கு இவர் மூத்தவர் என்பதை உங்கள் பதிவால் அறிந்தேன்.
அன்னையைப் போல், வாழ்ந்தாலும் ஏசும், ஏரிக்கரையின் மேலே என்னை வெகுவாகக் கவர்ந்த பாடல்கள்.
எப்படிப்பட்ட ஆற்றலும் அறிவும் தமிழ்ச்சுவையும் மிக்க கவிஞர்கள் இருந்த திரையுலகம், இன்று “கொலைவெறி” களால் சீரளிந்துள்ளது.
அன்றைய “உட்டாலங்கடி”க்கு திரையுலகைத் துறந்த கவிஞர் , இன்றைய கூத்துக்கிருந்தால்!
அருமையான பதிவுக்கு நன்றி!
Annadorai Kannadhasan
18/10/2014 at 6:59 am
காலம் தான் எவ்வுளவு பேரை மனம் போன போக்கில் பேச வைக்கிறது..கண்னதாசன் உச்சாணிக்கொம்பில் இருந்த போது எத்தனை படங்களில் ஒருபாடல்,இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறார்…பாகப்பிரிவினை,படித்தால் மட்டும் போதுமா,குழந்தையும் தெய்வமும்,இன்னும் பல படங்களில் வேறு ஒரு பாடலாசிரியர் பாடல் எழுதி இருக்கிறார்கள்..மாடர்ன் தியேட்டர்ஸ்சின் தேவகி படத்திற்கு மருதகாசி,கா,மு,ஷெரிஃப்,கண்ணதாசன் மூவரும் பாடல் எழுதி இருக்கிறார்கள்..இதில் வியாபாரம் எங்கிருந்து வந்தது?இந்து கடவுள்கள் பற்றி கா.மு.ஷெரிஃப் எத்தனை பாடல்கள் எழுதி இருக்கிறார்?
இந்த சர்ச்சை கண்னதாசனும் ஷெரிஃபும் உயிருடன் இருக்கும் போதே வந்தது..அந்த பாடல்”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” என்ற திருவருட்செல்வர் படத்தில் இடம் பெற்ற பாடல்…ஒரு சித்தர் பாடலின் தாக்கதில் இருவரும் எழுதியது.
இதோ அந்தப் பாடல்கள்…
“பணம் பந்தியிலே” படத்தில் கா.மூ.ஷெரீப் எழுதிய பாடல்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம்
விருப்புடன் தேடிடுவார் ஞானத்தங்கமே ! – அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே !
உண்மையைப் பேசிடுவார் ஒரு பிழையும் செய்தறியார்
ஊரெல்லாம் தூற்றிடுமே ஞானத்தங்கமே ! – அவரை
ஒதுக்கியே வைத்திடுமே ஞானத்தங்கமே !
நாக்கினிலே இனிப்பிருக்கும் நெஞ்சினிலே நஞ்சிருக்கும்
நல்லவரைப் போல் நடித்திடுவார் ஞானத்தங்கமே ! – அவரை
நாடும் நம்பிடுமே ஞானத்தங்கமே !
ஓதாத நூல்களில்லை உரைக்காத ஞானமில்லை
எது உண்மை என்றறியார் ஞானத்தங்கமே ! – உலகில்
இவர்களும் வாழுகின்றார் ஞானத்தங்கமே !
பந்தமேது பாசமேது பக்தியேது முக்தியேது
அந்தமெது ஆதியெது ஞானத்தங்கமே ! – இதை
அறிந்தவர் யாருமில்லை ஞானத்தங்கமே ! – என்னை
அறிந்தவர் யாருமில்லை ஞானத்தங்கமே !
இதே மூலத்தைக் கொண்ட சித்தர் பாடலிலிருந்து கவியரசர் கண்ணதாசன் “திருவருட்செல்வர்” படத்துக்காக எழுதிய பாடலைப் பார்ப்போம்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே ! – அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே !
உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத்தானுரைப்பான்
ஊருக்கே பகையாவான் ஞானத்தங்கமே ! – அவன்
ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே !
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே ! – அவன்
நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ! ஞானத்தங்கமே !
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத்தங்கமே ! – அவன்
கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ! ஞானத்தங்கமே !
இந்த ஒரு அற்புதமான கவிஞர்களின் ஆற்றலை ஒரே மூலத்திலிருந்து அவர்கள் வடித்த அருமையான திரைகானங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இதை 1984 ஆம் வருடம் மலேசியாவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திரு.கா.மு.ஷெரீஃப் அவர்களிடம் கேட்கப்பட்டு,அவர் இந்தப் பாடல் தான் அது,தான் திருவிளயாடலில் எந்தப்பாடலும் எழுதவில்லை என்று சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்
ஜெயகாந்தன் தவறாக பாடலை மாற்றி சொல்லி இருக்கிறார்